தமிழ்நாடு

கொரோனா பாதித்தவரின் வீட்டை அடைத்த சம்பவம்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் !

jagadeesh

கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவரின் வீட்டின் வாயிலை அடைக்கும் வகையில் தகரம் பொருத்தப்பட்ட சம்பவம் குறித்து 2 வாரங்களில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை குரோம்பேட்டையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஒருவருக்கு கடந்த 13 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தொற்றுக்கான சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். ஆனால் கொரோனா பாதித்து 14 நாட்கள் முடியாததால் அவரது வீட்டின் வாயிலை தகரம் வைத்து பல்லாவரம் நகராட்சி ஊழியர்கள் அடைத்தனர்.

இதனால் குடும்பத்தினர் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். அந்த வீட்டில் சில வாரங்களுக்கு முன் இதய அறுவை சிகிச்சை செய்த நோயாளி ஒருவரும் இருந்ததால், வாயிலை தகரத்தால் அடைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சுகாதாரத்துறை முதன்மைச்செயலாளர், நகராட்சி நிர்வாக ஆணையர், பல்லாவரம் நகராட்சி ஆணையர் ஆகியோர் 2 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.