தமிழ்நாடு

மனைவியுடன் சேர்த்து வைக்க வேண்டி நாட்டு வெடிகுண்டுகளுடன் வந்த கணவர்

webteam

மனைவியுடன் சேர்த்து வைக்க வலியுறுத்தி நாட்டு வெடிகுண்டுகளுடன் வீட்டு வாசலில் காத்திருந்த நபரை, நெய்வேலி காவல்துறையினர் சாதுர்யமாக மீட்டுள்ளனர்.

கழுத்தில் ‌‌நாட்டு வெடிகுண்டு‌, கையில் பெட்ரோல் நிரம்பிய கேன் என மணிகண்டன் என்பவர் தற்கொலை மிரட்டல் விடுத்தார். நெய்வேலியைச் சேர்ந்த இவர்,  கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மனைவியை பிரிந்து ‌வாழ்ந்து வருகிறார். நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நிலுவையிலுள்ள நிலையில், மனைவியுடன் சேர்த்து வைக்கக்கோரிதான் அவரது வீட்டிற்குச்சென்று தற்கொலை மிரட்டல் விடுத்தார் மணிகண்டன். இவர், சக்திவாய்ந்த நாட்டு வெடிகுண்டை கழுத்தில் மாலை போல் அணிந்துகொண்டு, உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றி கொண்டதால், அருகில் செல்லாமல் அக்கம்பக்கத்தினர் கூச்சலிட்டனர்.

அப்போது அந்த வழியாகச் சென்ற நெய்வேலி நகர தலைமை காவலர் பாலச்சந்திரனுக்கு விபரீதம் புரிந்தது. துரிதமாக காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்ததோடு, மணிகண்டனிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். பல மணிநேரம் பேசியும் தற்கொலை முடிவை அ‌வர் கைவிடவில்லை.

அப்போது சாதுர்யமாக செயல்பட்ட காவல்துறையினர் மணிகண்டனின் 2 வயது குழந்தையை அவரது அருகில் தூக்கிச்சென்றனர். அழுது கொண்டிருந்த தன் குழந்தையைக் கண்டதும் பாசத்தில் உருகினார் மணிகண்டன். அந்தச் சூழலை சாதகமாக்கிக் கொண்ட காவல்துறையினர், குழந்தையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டாவது தற்கொலை முயற்சியை கைவிடுமாறு கேட்டனர்.‌ இல்லையென்றால், குழந்தையோடு மூவரும் இறப்போம் எனக் கூறி குழந்தையோடு, தலைமைக்காவலர் பாலச்சந்திரன் அருகில் சென்றதும் அழுதபடியே தற்கொலை முயற்சியை கைவிட்டார்‌ மணிகண்டன்.

குழந்தையை ஆசையோடு தூக்கி கொஞ்சிய போது, மணிகண்டனின் உடலில் இருந்த வெடிகுண்டுகளை அகற்றி‌னர். ஆனால், தான் ஏற்க‌னவே விஷமருந்திவிட்டதாக மணிகண்டன் கூறி‌யதால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்து உயிரைக் காப்பாற்றியுள்ளனர். உரிய நேரத்தில், சாதுர்யமாக செயல்பட்டு உயிரைக் காப்பாற்றிய தலைமைக்காவலர் பாலச்சந்திரனுக்கும் அவரது குழுவினருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது