கோவையில் மற்ற பெண்களுடன் உள்ள தொடர்பை மறைத்து திருமணம் செய்துக்கொண்டதால் ஆத்திரமடைந்த மனைவி, கணவனை பட்டப்பகலில் மக்கள் செல்லும் சாலையில் அடிக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
கோவை சாய்பாபா கோவிலுக்கு வந்த கணவர், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கணவர் கையில் மற்றொரு பெண்ணின் பெயர் பச்சைக்குத்தி இருந்ததை கண்ட அந்த நபரின் மனைவி, அவரை அந்த கோவிலின் நுழைவாயிலில் வைத்தே மனைவி சரமாறியாக தாக்கியுள்ளார். கோவை அடுத்த கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த இருவரும், கடந்த 5 நாட்களுக்கு முன்பு தான் திருமணம் செய்துக்கொண்டுள்ளனர். காதலித்து திருமணம் செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
அந்த இளைஞருக்கு ஏற்கெனவே திருமணமாகி குழந்தை இருந்ததை மறைத்து, திருமணம் செய்துக்கொண்டதை அறிந்து அந்த பெண் ஆத்திரமடைந்து கணவரை சரமாறியாக சாலையில் அடித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இருவரையும் சமாதானம் செய்து, சந்தேகமிருந்தால் சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தை அணுக அந்த பெண்ணிடம் சொல்லி இருவரையும் அனுப்பி வைத்துள்ளனர். சாய்பாபா கோவிலுக்கு தம்பதியினர் இருவரும் தரிசனத்திற்கு வந்த இடத்தில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக அந்த வழியாக வந்தவர்கள் செல்போனில் படம் பிடித்துள்ளனர். அந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.