தமிழ்நாடு

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர் !

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர் !

webteam

சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றிப்பெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் 9 பேரும் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.

தமிழகத்தில் காலியாக இருந்த 22 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 18-ம் தேதியும், 4 தொகுதிகளுக்கு கடந்த 19-ம் தேதியும் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் பதிவான வாக்குகள் கடந்த 23 ஆம் தேதி மக்களவை தேர்தலுடன் சேர்த்து எண்ணப்பட்டன. இதில் அதிமுக 9 இடங்களிலும் திமுக 13 இடங்களிலும் வெற்றி பெற்றன.

அதிமுக சோளிங்கர், பாப்பிரெட்டிபட்டி, அரூர், நிலக்கோட்டை, மானாமதுரை, சாத்தூர், பரமக்குடி, விளாத்திக்குளம், சூலூர் ஆகிய  9 இடங்களிலும் வெற்றி பெற்றன.  

இந்நிலையில், வெற்றிபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் 9 பேருக்கும் சபாநாயகர் தனபால் இன்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சபாநாயகர் அறையில் இந்த பதவிப் பிரமாண நிகழ்வு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் நடைபெற்றது.

அரூர் தொகுதியில் வெற்றிபெற்ற வி.சம்பத் குமார், நிலக்கோட்டை தேன்மொழி, மானாமதுரை எஸ்.நாகராஜன், பாப்பிரெட்டிப்பட்டி கோவிந்தசாமி உள்ளிட்டோருக்கு சபாநாயகர் தனபால் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மேலும், பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றிபெற்ற சதன் பிரபாகரன், சாத்தூர் ராஜவர்மன், சோளிங்கர் சம்பத், சூலூரில் வென்ற பி.கந்தசாமி, விளாத்திகுளம் தொகுதியில் வெற்றி கண்ட சின்னப்பன் ஆகியோருக்கும் சபாநாயகர் தனபால் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

திமுகவைச் சேர்ந்த 13 பேரும் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் எம்.எல்.ஏ.க்களாக நேற்று பதவியேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது