புதிதாக கட்டப்பட்ட கழிவறை தரம் இல்லை என ஊர் பொதுமக்கள் எடுத்து வெளியிட்ட வீடியோ வைரலானதால், தற்போது அக்கழிவறை மீண்டும் சீரமைக்கப்பட்டு வருகிறது.
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியத்தில் திமுகவை சேர்ந்த மகேஸ்வரி 16வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இவர் தனது வார்டுக்குட்ப்பட்ட முத்துகிருஷ்ணபேரியில் கழிவறை கட்டுவதற்கு தன்னுடைய கவுன்சிலர் நிதியில் 3 லட்சம் ஒதுக்கி கழிவறை கட்டும் பணியை மேற்கொண்டார். பின், கழிவறை கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவுக்கு தயாரான நிலையில், பொதுமக்கள் சென்று பார்த்தபோது தரம் இல்லை என்று தெரியவந்துள்ளது. கழிவறை தரம் இல்லாமல் கட்டியதால் கால் வைக்கும் இடமெல்லாம் சுக்குநூறாக நொறுங்கி கிடக்கிறது. இதனை வீடியோவாக எடுத்த அந்தப் பகுதி மக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
அந்த வீடியோ சமூக வலைத்தலங்களில் வைரலானது. இரண்டு கழிப்பறை கட்ட 3 லட்சம் என்பதே அதிகம். அதிலும் தரமான பொருட்களை பயன்படுத்தாமல் தரமற்ற பொருட்களை பயன்படுத்தியதால் கோபமடைந்த அப்பகுதி மக்கள், புதிய கழிப்பறை கட்டித் தரவேண்டும் எனவும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதனை அடுத்து தற்போது அந்த கழிப்பறைகளின் தரைத்தளம் சீரமைக்கப்பட்டு வருகிறது.