புத்தாண்டை வரவேற்கும் வகையில் நள்ளிரவில் கோவில்களில் மக்கள் வழிபாடுகளை மேற்கொண்டனர்.
புத்தாண்டை முன்னிட்டு திருப்பதியில் லட்சக் கணக்கான பக்தர்கள் குவிந்தனர். நள்ளிரவு 12 மணிக்கு மூடப்பட்ட நடை 2.30 மணி அளவில் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் தங்களுக்குள் புத்தாண்டு வாழ்த்துகள் பரிமாரிக்கொண்டனர்.
திருத்தணி முருகன் கோயிலில் நள்ளிரவு 12 மணிக்கு நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு தரிசனத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர். விழாவில் தமிழகம் மட்டுமல்லாது புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா போன்ற பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் குவிந்தனர்.
சேலம் அழகாபுரி முருகன் கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. நள்ளிரவு 12 மணி அளவில் மகா தீப ஆராதனை செய்யப்பட்டது. வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகனுக்கு தங்க கவசம் சாத்தப்பட்டது.
இதே போன்று கிருஷ்ணகிரி பெரிய மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடு நடைபெற்றது. 18 கிராமங்களுக்கு சொந்தமான இந்த கோவில் வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.