தமிழ்நாடு

புத்தாண்டு கொண்டாட்டத்தில் பிரச்னை : சென்னையில் ஒருவர் வெட்டிக்கொலை

புத்தாண்டு கொண்டாட்டத்தில் பிரச்னை : சென்னையில் ஒருவர் வெட்டிக்கொலை

webteam

புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏற்பட்ட விரோதத்தால் இளைஞர் ஒருவர் ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை தாம்பரத்தை அடுத்த இரும்புலியூரில் வசித்து வந்தவர் யுவராஜ். இவர் தனியார் நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கஞ்சா பழக்கத்திற்கு ஆளானவர் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றிரவு தனது நண்பர்களுடன் யுவராஜ் வெளியே சென்றுள்ளார். அப்போது யுவராஜை மறித்த சில நபர்கள், அவரை அடிக்கப்போவதாகக் கூறி அவரது நண்பர்களை அங்கிருந்து ஓடச்சொல்லியுள்ளனர். இதையடுத்து அங்கிருந்த சென்ற யுவராஜ் நண்பர்களுள் ஒருவர், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது யாரும் இல்லாததால் அங்கிருந்து சென்றுவிட்டனர். ஆனால் காலை வரை யுவராஜ் வீடு திரும்பாததால், யுவராஜை தேடி அவர்கள் நண்பர்கள் காலையில் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அந்த இடத்திற்கு அருகே இருந்த குட்டை ஒன்றில் யுவராஜ் சடலமாக கிடந்துள்ளார். இதையடுத்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் யுவராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது யுவராஜுக்கும் மற்றொரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது தெரியவந்துள்ளது. அதன் காரணமாக யுவராஜ் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. அத்துடன் யுவராஜ் ரோட்டில் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்டிருப்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், மணி மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.