தமிழ்நாடு

சென்னையில் புத்தாண்டு விபத்து கடந்தாண்டை விட குறைவு: சென்னை காவல்துறை தகவல்

சென்னையில் புத்தாண்டு விபத்து கடந்தாண்டை விட குறைவு: சென்னை காவல்துறை தகவல்

webteam

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது நிகழ்ந்த விபத்துகளின் எண்ணிக்கை இந்தாண்டு குறைந்துள்ளதாக போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

புத்தாண்டை வரவேற்கும் பொருட்டு பொதுமக்கள் தங்கள் உறவினர்கள், நண்பர்களுடன் கொண்டாட்டங்களில் ஈடுபடுவர். சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அசம்பாவித சம்பவங்களை தடுக்க  நட்சத்திர விடுதிகளில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து  சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆலோசனை‌க்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துக்கொண்ட நட்சத்திர விடுதிகளின் நிர்வாகிகளுக்கும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்‌ பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறிவுரைகளை வழங்கப்பட்டது.

அசம்பாவிதங்களைத் தவிர்க்க 3,500 காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் சென்னையில் பொதுமக்கள் அதிகமாக கூடும் 51 இடங்களில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.இருப்பினும் சென்னையில் இருசக்கரம் மற்றும் 4 சக்கர வாகனங்களில் சென்ற 2 பேர் உயிரிழந்துள்ளனர். 150க்கும் மேற்பட்டோருக்கு பல்வேறு விபத்துகளில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை, ஸ்டான்லி உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படுகாயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறையினர் கூறுகையில், கடந்தாண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சென்னையில் மட்டும் 5 பேர் உயிரிழந்ததாகவும் 120 பேர் காயமடைந்தாகவும் தெரிவித்தனர். இந்தாண்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர். 179 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 84 பேர் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்றுவிட்டதாகவும், மீதமுள்ளவர்கள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுவருவதாகவும் அவர்கள் கூறினர்.