புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு வருடமும் ஜனவரி 1-ஆம் தேதி ஆங்கிலப் புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025-ஆம் ஆண்டு நிறைவடைந்து 2026-ஆம் ஆண்டு பிறந்துள்ளது. புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், ”2026ஆம் ஆண்டு விடியல், புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கை மற்றும் வலுப்படுத்தப்பட்ட உறுதியை அறிமுகப்படுத்தட்டும். மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்பு ஆகியவை வாழ்வில் நிரம்பட்டும். ஒற்றுமை மற்றும் சமூக நல்லிணக்கத்தை நிலைநிறுத்துவதற்கான கூட்டு உறுதியை மீண்டும் உறுதிப்படுத்துவோம்” என தெரிவித்துள்ளார்.
நாம் என்றால் தமிழ்நாட்டு மக்களாகிய அனைவரும் பெறப்போகும் வெற்றியைத்தான் குறிப்பிடுவதாக முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். அமைதி, நல்லிணக்கம், மகிழ்ச்சி, புதிய வெற்றிகள் நிறைந்த ஏற்றமிகு ஆண்டாக 2026 அமைந்திட நல்வாழ்த்துகள் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி, ’மலர்கின்ற புத்தாண்டு, மக்களுக்கு நிறைவான சந்தோஷத்தையும், தித்திக்கும் நிகழ்வுகளையும், நிறைந்த செல்வத்தையும், நீடித்த ஆயுளையும், நிம்மதியான வாழ்க்கையையும் வழங்கும் ஆண்டாக அமைந்திட வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
‘பிறக்கப்போகும் புத்தாண்டில் சவால்களை எதிர்கொள்வோம், சாதனைகள் நிகழ்த்துவோம்’ என பாமக நிறுவனர் ராமதாஸ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் ரவி பச்சமுத்து வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், ’புதிய ஆண்டில் சமூக ஒற்றுமை, சமத்துவம், சமூகநீதி மற்றும் முன்னேற்றம் அடைய அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்’ தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது வாழ்த்துச் செய்தியில், ’அமைதி, வளம், வளர்ச்சி என்ற பாதையில் தமிழ்நாட்டை அழைத்துச் சென்றிட தமிழகத்தை புதியதாய் மீண்டும் படைத்திட உறுதி ஏற்போம்’ என்று கூறியுள்ளார்.
’தமிழகத்தில் புதிய மாற்றம் ஏற்படும் ஆண்டாக நாடும், நாட்டு மக்களும் நலம்பெற, வளம்பெற அனைவரிடமும் நல்லிணக்கத்தை பேணும் ஆண்டாக அமையட்டும்’ என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கேவாசன் வாழ்த்தியுள்ளார்.
அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் தனது வாழ்த்துச் செய்தியில், ’சமூகப் பொருளாதார நிலையில் அவரவர் விரும்பிய உயர்ந்த நிலையை அடைந்திடவும், ஜாதி, மத, பேதமின்றி ஒன்றுபட்டு உழைத்திட உறுதியேற்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
’வரும் ஆண்டு புதியதோர் சமூகம் காணும், மானுட நேயம், சமூகநீதி, பகுத்தறிவு, சுயமரியாதை பொலிவு ஓங்கும் புத்தாண்டாக அமையட்டும்’ என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வாழ்த்து கூறியுள்ளார்.
’மலர்கின்ற 2026ஆம் ஆண்டு தமிழ்நாட்டு அரசியலிலும், இந்திய துணைக்கண்ட அரசியலிலும் வியப்பூட்டும் மகிழ்ச்சியான மாற்றங்களை வழங்க உள்ளது’ என மதிமுக பொதுச்செயலர் வைகோ புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ளார்.
’அனைத்து நாடுகளிடையேயும் நட்புறவும், ஒத்துழைப்பும் வலுப்பெறும் ஆண்டாக அமைந்திட வேண்டும்’ என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் வீரபாண்டியன் வாழ்த்து கூறியுள்ளார்.
’2026ஆம் ஆண்டு, தமிழகத் தேர்தல் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயம் என்பதை மக்கள் நிரூபிக்கப் போவது நிச்சயம்’ என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள
புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், ‘வாகை சூடும் வரலாறு திரும்பப் போகிறது என்றும், வளமான, நலமான பலமான தமிழகம் ஒளிரப் போகிறது’எனவும் கூறியுள்ளார்.