தமிழ்நாடு

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புதிய சீருடைகள் அறிமுகம்

webteam

தனியார் பள்ளிகளுக்கு இணையாக தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள புதிய சீருடை வண்ணங்கள் வரும் கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது.

தமிழகத்தில் அரசுப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ‌உள்ள மாணவர்களுக்கு புதிய சீருடை வண்ணங்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் பச்சை நிற அரைகால் சட்டையும், இளம்பச்சை நிறக் கோடிட்ட மேல் சட்டையும் அணிய வேண்டும் என்றும் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ‌உள்ள மாணவர்கள் பழுப்பு நிறத்தால் ஆன முழுக்கால் சட்டையும், இளம் பழுப்பு நிறத்தால் ஆன கோடிட்ட மேல் சட்டையும் அணிய வேண்டும் எனவும் மாணவிகள் கூடுதலாக பழுப்பு நிறக் கோட் அணிய வேண்டும் ‌எனவும் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் புதிய சீருடைகளை மாணவர்கள் வாங்கிக்கொள்ள வேண்டும் எனப் பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை ‌உள்ள மாணவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் இலவச சீருடையில் எந்த  மாற்றுமும் இல்லை. இந்தப் புதிய சீருடைகளை குறித்த சுற்றறிக்கை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநரால் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.