தமிழ்நாடு

டிரெக்கிங் போறவரா நீங்கள்..? இது உங்களுக்கான செய்தி..!

டிரெக்கிங் போறவரா நீங்கள்..? இது உங்களுக்கான செய்தி..!

Rasus

தமிழகத்தில் வனம் மற்றும் உயிரினப் பகுதிகளில் மலையேற்றத்திற்கான ஒழுங்குமுறை விதிகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் கொட்டக்குடி காப்புக்காடு பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டவர்களில் சிலர் உயிரிழந்ததையடுத்து வனப்பகுதிகளில் மலையேற்றத்திற்கான விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, மலையேற்றம் மேற்கொள்ள விரும்பும் குழுவினர் அல்லது நபர்கள் அந்தந்த மாவட்ட வன அலுவலரிடம் முன்அனுமதியை பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மலையேற்றப் பாதைகள் எளிதான பாதை, மிதமான பாதை மற்றும் கடினமான பாதை என மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எளிதான பாதைக்கு ஒரு நபருக்கு 200 ரூபாய் வீதமும், மிதமான பாதைக்கு நபருக்கு 350 ரூபாய் வீதமும், கடினமான பாதைக்கு ஒரு நபருக்கு 500 ரூபாய் வீதமும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எளிதான பாதை மற்றும் மிதமான பாதைகளில் மலையேற்றம் மேற்கொள்ளும் ஐந்து நபர்கள் கொண்ட குழுவினர் தங்களுடன் ஒரு வழிகாட்டியையும், கடின பாதையில் மலையேற்றம் மேற்கொள்ளும்போது ஒரு வழிகாட்டி மற்றும் வன ஊழியர் ஒருவரையும் அழைத்துச் செல்ல வேண்டும் என கூறப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணிகள் என்றால், கட்டணம் 1,500 ரூபாயில் இருந்து முறையே 3,000, 5,000 ரூபாய் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வனத்துறையில் பதிவு செய்து கொள்ளாத எந்த ஒரு நிறுவனமும் மலையேற்ற பயிற்சிகளை ஏற்பாடு செய்ய இயலாது என கூறப்பட்டுள்ளது. இவை தவிர மலையேற்ற பயிற்சி மேற்கொள்வதற்கு தடை செய்யப்பட்ட காலம், வழித்தடப் பயன்பாடு, பயிற்சி மேற்கொள்ளப்பட வேண்டிய நேரம் ஆகியவைகளையும் உள்ளடக்கி விதிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.