முல்லைப்பெரியாறு அணையில் புதிய தலைவர் தலைமையிலான மூவர் கண்காணிப்புக்குழு, திட்டமிட்டப்படி இன்று ஆய்வு மேற்கொள்கிறது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த கடந்த 2014ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 36 ஆண்டுகளுக்கு பிறகு அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தப்படுவதால் இரு மாநில பிரச்னைகள் நிகழாமல் இருக்க, மூவர் கண்காணிப்பு குழு அமைக்க உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
இதனையடுத்து மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் நாதன் தலைமையில் தமிழக, கேரள அரசு பிரதிநிதிகள் அடங்கிய மூவர் கண்காணிப்பு குழுவை மத்திய அரசு அமைத்தது.
இந்த குழுவினர் அணையின் நீர்மட்டத்தை இரண்டு முறை 142 அடியாக உயர்த்தியுள்ளனர். 2016ஆம் ஆண்டு மத்திய நீர்வள ஆணைய அணை பாதுகாப்பு பிரிவு இயக்குநரான பி.ஆர்.கே.பிள்ளை தலைமையில் ஆய்வு நடந்தது.
இவர் பணியிட மாற்றம் பெற்றதால், தற்போது புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் குல்சன் ராஜ் தலைமையில் 16 மாதங்களுக்கு ஆய்வு நடைபெற உள்ளது. குழு பிரதிநிதிகளாக தமிழக கேரள அரசு செயலர்கள் பங்கேற்கின்றனர். அணையின் பாதுகாப்பு, உறுதித்தன்மை, பருவ மழைக்காலங்களில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இக்குழு ஆய்வு செய்ய உள்ளது.