தமிழ்நாடு

நான் உங்க வேட்பாளர்... இது என் ‘பயோடேட்டா’- புது மாடல் பிரசாரம்

webteam

நுங்கம்பாக்கத்தில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர், தனது சுய விவரம் அடங்கிய ரெஸ்யூமை வீடு வீடாக சென்று கொடுத்து புதுமையான பாணியில் பரப்புரை மேற்கொண்டு வருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ளன. பொதுவாக, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் வேட்பாளர்கள் திறந்த வேன்களிலோ அல்லது ஊர்வலமாகவோ சென்று தங்களுக்கு ஓட்டுப் போடுமாறு கேட்பதை தான் இதுவரை நாம் பார்த்திருக்கிறோம்.

அதிலும் வேட்பாளர்கள் எதுவும் பேச மாட்டார்கள். அவருக்காக மற்றொருவர் மைக்கில் வாக்கு சேகரிக்க, வேட்பாளரோ வெறுமென கையை கூப்பியபடியே செல்வார். மேலும், வேட்பாளரின் விவரங்கள் பெரும்பாலும் பிரசாரங்களில் இடம்பெறாது. மாறாக, அவர்கள் சார்ந்த கட்சிகளின் விஷயங்கள்தான் பேசப்படும்.

இந்நிலையில், வழக்கமான இந்த தேர்தல் பிரசார விதிமுறைகளை உடைத்து, புதுமையை புகுத்தி இருக்கிறார் நுங்கம்பாக்கம் 110-வது வார்டு அதிமுக வேட்பாளர் அபிஷேக் ரங்கசாமி. கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் இவர், வீடு வீடாக சென்று தனது சுய விவரங்கள் அடங்கிய கண்கவர் துண்டறிக்கையை கொடுத்து வாக்கு சேகரிக்கிறார்.

அதில், கட்சியில் தான் பணியாற்றிய வருடங்கள்; வகித்த பதவிகள்; கல்வித் தகுதி, தனித்திறமைகள், வாங்கிய விருதுகள் முதலியவற்றை குறிப்பிட்டிருக்கிறார். இதன் மூலம் தங்களின் வேட்பாளரை பற்றிய அனைத்து விவரங்களையும் மக்கள் அறிந்து கொள்ள முடிகிறது. இவ்வாறு புதுமையான பாணியில் அவர் மேற்கொள்ளும் பிரசாரம் அப்பகுதியைச் சேர்ந்தவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.