தமிழ்நாடு

48 மணி நேரத்தில் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் : வானிலை மையம்

kaleelrahman

அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்துவரும் நிலையில், அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இது மேற்கு வட மேற்கு திசையில் இலங்கை மற்றும் தென் தமிழகத்தை நோக்கி நகரும். இதனால் வரும் 25ஆம் தேதி முதல் தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்ககடல்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழக கடலோர பகுதி வரை நீடிக்கிறது. இதன் காரணமாக மதுரை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 25 மற்றும் 26ஆம் தேதிகளில் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும் உள் மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்த நிலையில்தான் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.