வேளாண் பட்ஜெட் 2025 - 2026  முகநூல்
தமிழ்நாடு

வேளாண் பட்ஜெட்|புவிசார் குறியீடு பெற்ற 5 விளைப்பொருட்கள் முதல் 3.58 லட்சம் கோடி பயிர்க் கடன் வரை!

புவிசார் குறியீடு பெற்ற 5 விளைப்பொருட்கள் முதல் 3.58 லட்சம் கோடி பயிர்க் கடன் என பல முக்கிய அறிவிப்புகள் வேளாண் பட்ஜெட் 2025 - 2026 நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையை வாசிக்க தொடங்கியுள்ளார் வேளாண் துறை அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம் . முக்கிய நலத்திட்ட அறிவிப்புகள். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை....

புவிசார் குறியீடு

வேதாரண்யம் முல்லை, நத்தம் புளி, கப்பல்பட்டி முருங்கை உள்ளிட்ட 5 விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பனை சாகுபடியை ஊக்குவிக்க பனை மேம்பாட்டு இயக்கத்திற்கு ரூ. 1.65 கோடி நிதி ஒதுக்கீடு.

பலா மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் புதிய பலா சாகுபடியை ஊக்குவிக்க ரூ. 5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

வேளாண் இயந்திரங்கள் தொடர்பாக...

வேளாண் இயந்திரம் மற்றும் கருவிகள், இ-வாடகை செயலி மூலம் வழங்கப்படும்.

உழவர்கள் குறைந்த வாடகையில் இயந்திரம் பெற, ரூ. 17 கோடியில் வேளாண் இயந்திர வாடகை மையம் அமைக்கப்படும். 500 ஏக்கரில் வெண்ணெய் பழம் சாகுபடி ஊக்குவிக்கப்படும்.

அனைத்து வேளாண் பணிகளையும் இயந்திரம் ஆக்கும் நோக்கில், ரூ. 3 கோடியில் இது குறித்து உழவர்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்படும்.

300 கிராம இளைஞர்களுக்கு மன் அள்ளும் இயந்திரம் மற்றும் வேளாண் இயந்திரங்கள் தொடர்பாக திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.

வேளாண் வணிகத்துறை மூலம் 100 மதிப்பு கூட்டு அலகு அமைக்கும் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.வட்டாரங்கள் தோறும் தேர்வு செய்யப்பட்ட மையங்களில் வேளாண் விளை பொருட்கள் விற்பனை செய்யப்படும்.

முதலீட்டு கடன்

உழவர்களுக்கு 10 லட்சம் வரை முதலீட்டு கடன் வழங்கப்படும்.

இந்திய அளவில் முந்திரி ஏற்றுமதியில் தமிழ்நாடு 2ம் இடத்தில் உள்ளது. இதனை ஊக்குவிக்க, ரூ. 10 கோடியில் உழவர்கள் மேம்பட முந்திரி வாரியம் அமைக்கப்படும்

2021-24 வரை 147 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் நீர்ப்பாசன பகுதிகளில் கால்வாய்களை தூர்வாரியதால், 89.90 லட்சமாக இருந்த பாசன பகுதி 96 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது.

கரும்பு உற்பத்தியில் தமிழகம் 2 ஆம் இடத்தில் உள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு 215 ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

பயிர் கடன்

1,000 முதலமைச்சர் உழவர் நல சேவை மையம் அமைக்க ரூ. 42 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதுவரை 30 லட்சம் உழவர்களுக்கு பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

பயிர்க் கடன் ரூ. 3.58 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. வேளாண் பட்டதாரிகளை வேளாண் தொழில் முனைவோர்களாக ஆக்கும் திட்டத்தில் 431 இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக மாறி உள்ளனர். அவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.

வேளாண் துறை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போருக்கு விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் விருது.

மலர்கள் சாகுபடி

தினசரி வருமானம் ஈட்டுவதற்கு மலர்கள் சாகுபடியை ஊக்குவிக்க ரூ. 8.51 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதில், மதுரை மல்லிக்கான சிறப்புத் திட்டத்தின் கீழ் 3,000 ஏக்கரில் மல்லிகைச் செடி வளர்க்க ஊக்குவிக்கப்படும். இதற்காக ரூ. 1.60 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

ரோஜா மலர் சாகுபடியை ஊக்குவிக்க ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 2,500 ஏக்கரில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி மிளகாய் சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். விருதுநகர், இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

பாரம்பரிய காய்கறி சாகுபடி

பாரம்பரிய காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க, ரூ. 2.40 கோடியில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். வெங்காயத்தை சேமித்து வைத்து விற்பனை செய்ய கிடங்கு அமைப்பதற்கு மானியம் வழங்க ரூ. 18 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

காய்கறிகள் விதை தொகுப்பு 15 லட்சம் குடும்பங்களுக்கு 75% மானியத்தில் வழங்கப்படும். பழச் செடி தொகுப்பு 9 லட்சம் குடும்பங்களுக்கு 75% மானியத்தில் வழங்கப்படும். பயிர் வகை விதைத் தொகுப்பு 1 லட்சம் இல்லங்களுக்கு 75% மானியத்தில் வழங்கப்படும். புரதச்சத்து நிரைந்த காளான் உற்பத்தியை ஊக்குவிக்க ஊரக பகுதியில் 5 காளான் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும்.