தமிழ்நாடு

குப்பைகளை தரம்பிரிப்போருக்கு தங்கநாணயம் பரிசு: திருச்சி மாநகராட்சியின் புதுத்திட்டம்

Rasus

தமிழகத்தின் மையப்பகுதியாக விளங்கும் திருச்சியில் குப்பைகளை கையாள மாநகராட்சியின் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. குப்பைகளைத் தரம்பிரிப்போர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு தங்கநாணயம் பரிசு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சியில், தினசரி 710 மெட்ரிக் டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. அரியமங்கலம் குப்பைக்கிடங்கில் கொட்டப்பட்டு வந்த இந்த குப்பைகளை கையாள திருச்சி மாநகராட்சி நிர்வாகம் புதிய திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளது. இதன்படி, திருச்சி மாநகரம் முழுவதிலும், 13 நுண்ணுரம் செயலாக்க மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கண்டோன்மெண்ட், காந்தி மார்க்கெட், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட 13 இடங்களில் செயல்பட்டு வரும் இம்மையங்களால், அரியமங்கலம் குப்பை கிடங்கிற்கு செல்லும் குப்பை அளவு சற்று குறைந்துள்ளது.

குப்பைகளைத் தரம் பிரிக்கும் பணிகளில் நுண்ணுரம் செயலாக்க மையங்களில் 300-க்கும் மேற்பட்ட சுய உதவி குழு பெண்கள் வேலை செய்து வருகின்றனர். இதன்மூலம் சுயஉதவிக்குழு பெண்களுக்கு கூடுதல் வருமானம் கிடைப்பதோடு, நகரமும் தூய்மையாகிறது.

பொதுமக்களை ஊக்கப்படுத்தும் விதமாக, குப்பைகளை தரம்பிரித்து வழங்குவோர் தங்களது புகைப்படத்தை மாநகராட்சி தொடர்பு எண்ணிற்கு அனுப்பினால், அதில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் மூன்று நபர்களுக்கு தலா ஒரு கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் எனவும் திருச்சி மாநகராட்சி அறிவித்துள்ளது.