108 ஆம்புலன்ஸ் சேவையை நவீன படுத்தும் வகையில் புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று புதுக்கோட்டையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டியளித்தார்.
புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக 108 ஆம்புலன்ஸ் சேவையின் துணை கட்டுப்பாட்டு மையம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. அதற்கான கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் புதிதாக 60 பணியாளர்களுக்கு தற்போது பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் முதற்கட்டமாக 19 பணியாளர்களுக்கு பணி நியமன ஆணையை சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று வழங்கி அவர்கள் எவ்வாறு அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்ற வேண்டும் என்று பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில்,
இந்த இக்கட்டான காலகட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை மகத்தானது . இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் 108 ஆம்புலன்ஸ் சேவை சிறப்பாக செயல்படுகிறது. தமிழகத்தில் தற்போது 1505 ஆம்புலன்ஸ்கள் செயல்பாட்டில் உள்ளது, இதில் 450 ஆம்புலன்ஸ்கள் கொரோனா நோயாளிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 2.50 லட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் இந்த ஆம்புலன்ஸ் மூலம் பயன் அடைந்துள்ளனர்
சென்னையில் இயங்கும் ஓலா, ஹ_ப்பர் போன்ற கால்டாக்சிகளுக்கான செயலியை போல் 108 ஆம்புலன்ஸ்கள் வரும் தகவல்களையும் பயனாளிகள் பார்த்து அறியும் வகையில் விரைவில் புதிய செயலி ஒன்று தொடங்கப்பட உள்ளது. அந்த செயலி பயன்பாட்டுக்கு வரும்போது சர்வதேச அளவில் தமிழகத்தின் 108 ஆம்புலன்சில் சேவை பாராட்டை பெறும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.