தமிழ்நாடு

சமையல் எரிவாயு முகவரை மாற்றிக் கொள்ளும் புதிய திட்டம்

webteam

கோயம்புத்தூர் உள்ளிட்ட சில நகரங்களில் மக்கள் தாங்கள் விரும்பும் சமையல் எரிவாயு முகவரை மாற்றிக் கொள்ளும் திட்டத்தை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது.

நுகர்வோருக்கு அதிகாரமளிக்கும் வகையில் புதிய திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதியின் மூலம் மக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறிப்பிட்ட எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனத்துடன் இணைந்துள்ள எந்த ஒரு விநியோகஸ்தரிடம் இருந்தும் சேவையை பெற்றுக் கொள்ளலாம்.

முதற்கட்டமாக கோயம்புத்தூர், சண்டிகர், குர்கான், புனே மற்றும் ராஞ்சி ஆகிய நகரங்களில் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது. எண்ணெய் நிறுவனங்களின் இணையதளங்கள் மற்றும் கைபேசி செயலிகள் மூலம் நுகர்வோர்கள் இந்த சேவையை பெறலாம் என பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வீட்டிலிருந்தவாறே தங்களது சமையல் எரிவாயு விநியோகஸ்தரை நுகர்வோர்கள் மாற்றிக்கொள்ள இந்த வசதி வழிவகை செய்கிறது. கடந்த மே மாதம் நடைபெற்ற சோதனை முயற்சியின் போது 55 ஆயிரத்து 759 விநியோகஸ்தர் மாற்றல் கோரிக்கைகள் எண்ணெய் நிறுவனங்களால் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.