தமிழ்நாடு

கோயில் முதல் கடற்கரை வரை; தமிழகத்தில் எதற்கெல்லாம் புதிய தளர்வுகள் அறிவிப்பு? - முழு தகவல்

நிவேதா ஜெகராஜா

தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்களில் வழிபட வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்கு செல்ல அனுமதி தரப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான ஊரடங்கு நீட்டிப்பானது வரும் 31ம் தேதிவரை அமலிலுள்ள நிலையில், எதிர்வரும் பண்டிகைக்காலத்தை மனதில் வைத்து, இந்த காலத்துக்கான கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும், அண்டை மாநிலங்களில் கொரோனா தொற்று வேகவாக பரவிவருவதை கருத்தில் கொண்டும் தலைலமச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் இன்று ஆலோசனைனக் கூட்டம் நடைபெற்றது. அதன்முடிவில்தான் புதிய அறிவிப்புகள் வெளிவந்துள்ளன.

கடந்த கட்டுப்பாடு நீட்டிப்பு குறித்த ஆலோசனையின் முடிவின்படி தற்போது தமிழகத்தில் 9 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அப்போதே ஒன்று முதல் எட்டாம் வகுப்புகள் வரையிலான பள்ளிகளை நவம்பர் 1-ஆம் தேதி முதல் திறக்க தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. பள்ளிகளைத் திறப்பதற்கு முன்பாக பல்வேறு கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில் இன்றைய அறிவிப்பில் இவற்றுடன் மழலையர், நர்சரி, அங்கன்வாடி பள்ளிகள் செயல்படவும் அனுமதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

நர்சரி, காப்பாளர், சமையலர் பள்ளிகள் அனைத்தின் பணியாளர்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போலவே தனியார் நிறுவனங்கள் நடத்தும் பொருட்காட்சிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 100 பேரும்; இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 பேரும் பங்கேற்க அனுமதி தரப்பட்டிருக்கிறது. அரசியல் கூட்டங்கள், திருவிழாக்கள், சமுதாய, கலாசார நிகழ்வுகளுக்கான தடை தொடர்கிறது. மற்றொருபக்கம், இரவு 11 மணி வரை உணவகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.