ரிசர்வ் வங்கி pt desk
தமிழ்நாடு

ரிசர்வ் வங்கியின் புதிய உத்தரவு... அடகு வைத்த நகைகளை திருப்புவதில் சிக்கல் - விவசாயிகள் வேதனை!

நகை கடனுக்கு வட்டி செலுத்துவதில் புதிய உத்தரவு பிறப்பித்துள்ள ரிசர்வ் வங்கி குறித்த case study.

PT WEB

செய்தியாளர்: சுப.முத்துப்பழம்பதி

வங்கிகளில் வைக்கும் நகைக் கடன்களுக்கு கால அவகாசம் முடியும் தருவாயில் வட்டி மட்டும் செலுத்தி திருப்பி வைக்கும் நடைமுறையை மாற்றி முழுத் தொகையும் செலுத்திதான் நகைகளை மீண்டும் அடகு வைக்க வேண்டும் என்று புதிய விதிமுறையை ரிசர்வ் பேங்க் நடைமுறைப்படுத்தி உள்ளது. இது ஏழை எளிய விவசாயிகள் பொதுமக்கள் நடுத்தர மக்கள் ஆகியோரை கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

இது குறித்து ஒட்டுமொத்த ஏழை எளிய நடுத்தர விவசாயிகளின் பிரதிபலிப்பாக புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த நடுத்தர விவசாயி துரைராஜ் என்பவரின் நிலையை விளக்குகிறது இந்த தொகுப்பு...

Gold loan

ரூ 5.50 லட்சத்திற்கு இரண்டு வங்கிகளில் நகைகளை அடகு வைத்துள்ள துரைராஜ், முழு தொகையையும் செலுத்தி நகையை திருப்ப முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார். 30 ஆண்டுகளுக்கு மேலாக இதே போல் வங்கிகளில் நகைகளை அடகு வைத்து வட்டி மட்டும் கட்டி திருப்பி வைத்து வந்த நிலையில், இனி என்ன செய்வது என்று தெரியாத நிலைக்கு உள்ளாகி உள்ளார்.

விவசாயம் மற்றும் கால்நடைகள் ஆகியவை மூலம் வருமானம் ஈட்டி வந்தாலும், மருத்துவச் செலவு விவசாய பணிகள் மகளின் திருமணம் உள்ளிட்ட காரணங்களால் நகைகளை வங்கிகளில் அடகு வைத்து பணம் பெற்று அதன் மூலம் வாழ்வை நகர்த்தி வரும் துரைராஜ், ரிசவ் வங்கியின் இந்த அறிவிப்பு தமக்கு பெரும் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

money

எனவே இந்த உத்தரவை உடனடியாக ரிசர்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் தன்னைப் போன்ற விவசாயிகள் வங்கிகளில் வைத்த நகைகளை இழப்பதோடு பெரும் இன்னலுக்கு உள்ளாக நேரிடும் என்றும் அவர் கண்ணீரோடு தெரிவித்தார்.