தமிழ்நாடு

சென்னையில் எங்கே தேங்குகிறது மழை நீர்? சிசிடிவி வைத்து கண்காணிக்கிறது மாநகராட்சி!

webteam

வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்வதற்காக சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு சி.சி.டி.வி கேமிரா மூலம் நேரடி கண்காணிப்பு பணி செய்யப்பட்டு வருகிறது.

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு இருக்கிறது. மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடி தலைமையில் பணிகள் மேற்கொண்டு வரும் நிலையில் 15 மாநகராட்சி மண்டலத்தில் வரும் புகார்கள் உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதற்காக கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது. தொலைபேசி மூலம் வரும் புகார்கள் துறைசார்ந்த அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தனர்.

பருவமழையை எதிர்கொள்ள அனைத்துவகையிலான கண்காணிப்பு

சென்னையில் 41 மையத்தில் 668 சி.சி.டி.வி கேமிராக்கள் வைக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமான பல இடங்களை நேரடியாக கண்காணிப்பு செய்கின்றனர். குறிப்பாக சுரங்கப்பாதைகள் கீழ் மழைநீர் தேங்குகிறதா, கால்வாய் பகுதிகளில் மழை தண்ணீர் தேக்கம் இருக்கிறதா என்பதும், அடையாறு முகத்துவாரம் பகுதிகளும் கண்காணிப்பு செய்யப்படுகிறது. மேலும் மண்டல வாரியாக மழைப் பொழிவு அளவு குறித்தும் கண்காணிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

ஒரு நாளில் மட்டும் 200 அழைப்புகள்

நேற்று ஒருநாளில் மட்டும் கட்டுப்பாட்டு அறைக்கு 200 அழைப்புகள் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மண்டல வாரியாக ஆய்வு பணிகளை மேற்கொண்டாலும், 1913 என்ற எண்ணில் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பதன் மூலம் புகார்கள் மீதும் உரிய துரித நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

அதேபோல் நெடுஞ்சாலைத்துறை, தீயணைப்பு, காவல்துறை மற்றும் குடிநீர் வாரியம் மூலமாக இணைந்து பருவமழை எதிர்கொள்வதற்கான நடவடிக்கை மூலம் மக்கள் பிரச்னைகளில் உடனடியாக கவனம் செலுத்த முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.