தமிழ்நாடு

மகளிர் பாதுகாப்பு & பொருளாதார மேம்பாட்டிற்காக தமிழகத்தில் விரைவில் புதிய சட்டம்!

webteam

மகளிர் பாதுகாப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் விரைவில் ஒரு தீர்மானத்தை கொண்டு வரவுள்ளதாகவும், அது நிச்சயம் ஏகமனதாக சட்டமாக நிறைவேற்றப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

சென்னை பசுமை வழி சாலையில் உள்ள தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் இந்திய அரசியலமைப்பு சட்ட நாள் விழா கொண்டாடப்பட்டது. அதில் ஆணையத்தின் தலைவர் எஸ்.பாஸ்கரன், செயலாளர் விஜய கார்த்திகேயன், தமிழக அரசிற்கான டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், மாநில மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமரி, காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை, அதிமுக எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய சபாநாயகர் அப்பாவு, அரசியலமைப்பு சட்டத்தில் பிரதமராக இந்திரா காந்தி இருந்தபோது திருத்தம் செய்தனர், ஆனால் அதே சட்டம் மூலமாக 6 ஆண்டுகள் அவர் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டது. இந்தியாவின் ஆட்சி மொழி இந்தி தான் என்கிற பக்கங்களை மறைந்த பேராசிரியர் அன்பழகன் கிழித்தெறிந்தார், மாநில மனித உரிமைகள் ஆணையத்தை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவாக்கினார். அவர்களின் வழியில் செயல்பட்டு வரும் முதல்வர் ஸ்டாலின், மாணவர்களின் நலனுக்காக டெல்லி அரசு பள்ளிகளை பார்த்து, தமிழகத்தில் ஸ்மார்ட் வகுப்பு, காலை சிற்றுண்டி திட்டம் முதலியவற்றை தொடங்கி வைத்துள்ளார்.

மேலும் ஆளுநர் குறித்து பேசிய அவர், அரசியலமைப்பு சட்டப்படி பனியாற்றுவேன் என பதவியேற்ற ஆளுநர், மதச்சார்பற்ற இந்தியாவை மதச்சார்புடைய நாடு என பேசியது வேதனை அளிப்பதாகவும், அதை அவர் தவிர்த்திருக்க வேண்டும் மற்றும் பொறுமையாக பொறுப்புடன் பேசியிருக்க வேண்டும் என கூறினார்.

வீடுகளில் வேலைப் பார்க்கும் பெண்களின் உரிமைகளை காக்கும் வகையில், வீட்டு வேலை பணியாளர் நல வாரியம் அமைக்கப்பட்டு, அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்துடன் இணைக்கப்பட அறிவுறுத்தப்பட்டும், அதில் 85 ஆயிரம் பேர் மட்டுமே பதிவு செய்துள்ளதாகவும், விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவரையும் உறுப்பினராக சேர்க்க வேண்டுமென்றும் தெரிவித்தார்.

மேலும் ”மகளிர் பாதுகாப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக புதிய தீர்மானம் ஒன்றை முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க உள்ளார். அது சட்டமாக ஏகமனதாக நிச்சயம் நிறைவேற்றப்படும்” என்று உறுதியளித்தார்.

பின்னர் தொடர்ந்து மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் பாஸ்கரன், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமரி மற்றும் அரசு தலைமை வழக்கறிஞர் எஸ்.சண்முகசுந்தரம் ஆகியோர் உரையாற்றினர்.

நிகழ்ச்சிக்கு பின்னர், வீட்டுவேலை செய்யும் தொழிலார்களின் சட்டப் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.