கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி இரவு தவெக தலைவர் விஜய் பரப்புரையில் ஈடுபட்டபோது, கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 41 ஆக உயர்ந்துள்ளது.
கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி இரவு தவெக தலைவர் விஜய் பரப்புரையில் ஈடுபட்டபோது, கூட்டநெரிசலில் சிக்கி அன்று இரவே 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது, நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, கரூர், சணப்பிரட்டி தொழிற்பேட்டையைச் சேர்ந்த நவீன் என்பவர், நேற்று மதியம் உயிரிழந்தார். இதனால், பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்தது. உயிரிழந்தவர்களின் உடல்கள், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, நேற்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த நிலையில் இன்று (செப் 29) அதிகாலை கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த வேலுசாமிபுரத்தைச் சேர்ந்த நல்லுசாமி என்பவரின் மனைவி சுகுணா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விசாரணை நடத்த, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. அந்தக் குழுவினர் நேற்று மாலை வேலுச்சாமிபுரத்தில் ஆய்வு மேற்கொண்டனர். சம்பவ இடத்தில் பொதுமக்களிடம் அவர்கள் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் சம்பவம் நடந்த இடம், மருத்துவமனை, உயிரிழிந்தவர்கள் வீடுகளுக்குச் சென்றும் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, கரூர் டிஎஸ்பி செல்வராஜ் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த நிலையில், புதிய விசாரணை அதிகாரியாக ஏஎஸ்பி பிரேமானந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரும் இன்று முதல் விசாரணையை மேற்கொண்டு வருகிறார்.