கொடுங்கையூரில் புதிதாக திறக்கப்பட்ட பேக்கரியில் ஏற்பட்ட தீ விபத்தின் போது, எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 48 பேர் காயமடைந்தனர். இதனிடையே செல்ஃபி எடுப்பதற்காக ஏராளமானோர் தீ விபத்து ஏற்பட்ட கடை முன் குவிந்ததே அதிகமானோர் காயமடைய காரணம் என புகார் எழுந்துள்ளது.
கொடுங்கையூரில் கடந்த 4 நாட்களுக்கு முன்புதான் ஆனந்த் என்பவர் முருகன் ஹாட் சிப்ஸ் என்ற பெயரில் புதிய பேக்கரி ஒன்றை திறந்துள்ளார். நேற்று விற்பனை முடிந்து கடை மூடப்பட்ட சிறிது நேரத்தில் கடையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது, அதிகப்படியான தீ ஜூவாலை தாக்கியதில் விருதுநகரைச் சேர்ந்த தீயணைப்பு வீரர் ஏகராஜ் படுகாயமடைந்தார். தொடர்ந்து தீயை கட்டுப்படுத்த முயற்சிகள் நடைபெற்ற போது, அங்கு கூடிய ஏராளமானோர் எரியும் கடை முன் செல்பி எடுக்க முயன்றனர். அவர்களை கொடுங்கையூர் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் விமலேஷ் விரட்டியும் பலர் முண்டியடித்து செல்பி எடுத்ததாகக் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
அப்போது யாரும் எதிர்ப்பாரத வகையில் பேக்கரிக்குள் இருந்த எரிவாயு சிலிண்டர் வெடித்தது. அதில், மீட்புப்பணியில் இருந்த 8 பேர் மட்டுமின்றி, செல்ஃபி எடுப்பதற்காக கடை முன் குவிந்தவர்கள் பலரும் தீக்காயம் அடைந்தனர்.
தீக்காயம் ஏற்பட்ட 30 பேருக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களை காவல்துறை கூடுதல் ஆணையர் சாரங்கன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். ஸ்டான்லி மருத்துவமனையில் 12 பேருக்கும், ராஜூவ்காந்தி பொது மருத்துவமனையில் ஒருவருக்கும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. படுகாயமடைந்த கடையின் உரிமையாளர் ஆனந்த் உள்ளிட்ட இருவர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்க மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர்
ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதனிடையே, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிசைக்காக அனுமதிக்கப்பட்ட தீயணைப்பு வீரர் ஏகராஜ் இன்று காலை உயிரிழந்தார்.
எதிர்பாராத வகையில் தீ விபத்து ஏற்பட்டிருந்தாலும், இதில் பொதுமக்கள் காயமடைந்ததற்கு செல்ஃபி மோகமே காரணம் என காவல்துறையினர் குற்றம்சாட்டுகின்றனர். இது போன்ற விபத்துகளில் மீட்புக்குழுவுக்கு உதவியாக இல்லை என்றாலும், செல்ஃபி எடுத்து நெருக்கடியை ஏற்படுத்த வேண்டாம் என்றும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.