கடலூர் செம்மங்குப்பம் ரயில் விபத்து pt
தமிழ்நாடு

ரயில் விபத்துக்கு என்ன காரணம்? வெளியானது புதிய தகவல்

இந்தநிலையில், கடலூர் செம்மங்குப்பம் ரயில் விபத்து சம்பவத்தில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

கடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் செம்மங்குப்பம் அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது, அப்பகுதியில் இருக்கும் ரயில்வே கேட் மூடப்படாததால் பள்ளிவேன் ரயில்வே ட்ராக்கைக் கடக்க முயற்சித்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது பள்ளிவேன் மீது வேகமாக வந்த ரயில் மோதியதில் கோரமான விபத்து நிகழ்ந்திருக்கிறது. இந்த விபத்தில் தனியார் பள்ளிவேன் தூக்கி வீசப்பட்டிருக்கிறது. வேனில் இருந்த குழந்தைகளும் தூக்கிவீசப்பட்டனர். இதனால், 3 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

ஒருபுறம் கேட் கீப்பர் கேட்டை மூடாமல் வைத்தது, அவர் தூங்கிகொண்டிருந்ததுதான் விபத்துக்கு காரணம் என்றும், மறுபுறம் கேட் கீப்பரிடம் கேட்டை திறக்க சொல்லி பள்ளி பேருந்தின் ஓட்டுநர் வற்புறுத்தியதால்தான் கேட் திறப்பட்டது என்றெல்லாம் விபத்துக்கான காரணங்கள் பல விதமாக முன்வைக்கப்படுகின்றனர்.ஆனால், உண்மையான காரணம் தற்போதுவரை வெளியாகவில்லை.

இந்தநிலையில், கடலூர் செம்மங்குப்பம் ரயில் விபத்து சம்பவத்தில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. பயணிகள் ரயில் கடக்கும் முன் அதிகாரி விமல் தொலைபேசியில் அழைத்த நிலையில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மா பதிலளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும், கேட் கீப்பர் பங்கஜ் உறங்கிவிட்டார் என்றும் , கேட்டை மூட மறந்துவிட்டேன் என விசாரணையின்போது பங்கஜ் சர்மா கூறியதாக காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், கைது செய்யப்பட்ட கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை 22 ஆம் தேதி வரை கடலூர் மத்திய சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கேமராவில் இருந்த சிப்பை காணவில்லை 

குறிப்பாக, பள்ளி வாகனத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றியுள்ளதாக ரயில்வே காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விபத்தின் போது வாகனம் நொறுங்கியதால் சிசிடிவி கேமராவில் இருந்த சிப் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், சிசிடிவி கேமரா சிப்பை மீட்பதற்கான பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், விபத்து நடந்த போது பள்ளி வேன் ஓட்டுநர் உடனடியாக வாகனத்தில் இருந்து குதித்ததாக கூறப்படுகிறது.

புதிய கேட் கீப்பர்

இந்நிலையில், பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து நடந்த இடத்தில் புதிய கேட் கீப்பராக ஆனந்தராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முழுமையான ரயில்வே விதிகளை பின்பற்ற அதிகாரிகள் அறிவுறுத்தியதாக புதிய கேட் கீப்பர் தெரிவித்துள்ளார்.