தமிழ்நாடு

ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது எப்படி? - வெளியான புதிய தகவல்

JustinDurai
குன்னூர் அருகே மலைப்பாதையில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோர் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதற்கான காரணங்கள் குறித்த புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.
குன்னூர் வெலிங்டன் பகுதியில் நிலவிய பனிமூட்டம் மற்றும் சரியாக பார்க்கமுடியாத தெளிவற்ற சூழல் காரணமாக ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியிருக்கலாம் என்று விமானப்படை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதிமுக்கிய பிரமுகர்களுக்கான திட்டமிடப்பட்ட விமானம் என்பதால், தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் குறைவு என்றும் அவர்கள் கூறுகின்றனர். மோசமான வானிலையில் ஹெலிகாப்டர் பறக்கும் தன்மை கொண்டது என்றாலும் மலைப்பாங்கான நிலப்பரப்பு என்பதால் குறைந்த உயரத்தில் இருந்து விழுந்ததாக தெரிவதாகவும் விமானப்படை நிபுணர்கள் தெரிவித்தனர்.
இந்திய வானிலை ஆய்வு மைய தகவலின்படி குன்னூரில் நேற்று காலை 8.30 மணி வரை 4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் பகலில் அதிகபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸாக இருந்தது. காலை 11.30 மணியளவில் பனிமூட்டம் அல்லது மேகங்களால் எதிரே உள்ளதை பார்க்க முடியாத சூழல் இருந்திருக்கலாம் என்றும் நிபுணர்கள் தெரிவித்தனர்.
ஹெலிகாப்படர் தரையிறங்குவதற்கு 7 நிமிடத்திற்கு முன்னதாக விமானியிடம் இருந்து கோவை விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு கடைசித் தகவல் வந்துள்ளது. அப்போது ஹெலிகாப்டர் 4000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொதுவாக விமானியிடம் இருந்து அவசர கால அழைப்பு வந்தால் விமான கட்டுப்பாட்டு அறையில் உள்ள அனைவரும் கேட்கும் அளவுக்கு வசதிகள் இருக்கும் என்றாலும், அவ்வாறான அழைப்பு ஏதும் வரவில்லை என்றும் அதிகாரிகள் கூறினர். மிகவும் தாழ்வான பகுதியில் பறக்கும் ஹெலிகாப்டரை ரேடார் மூலம் கண்காணிக்கும் வசதி கோவை விமான கட்டுப்பாட்டு மையத்தில் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.