தமிழ்நாடு

5 நாட்களாக சுவரில் துளை.. திருச்சி நகைக்கடை கொள்ளையில் திடுக்கிடும் தகவல்..!

Rasus

லலிதா ஜுவல்லரி கொள்ளை தொடர்பாக சுரேஷ் என்பவரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் கொள்ளை தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹாலிவுட் திரைப்படப் பாணியில் நடத்தப்பட்ட லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம் குறித்த விசாரணையில், தோண்டத் தோண்ட வெளிவரும் தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. இந்த வழக்கில் தேடப்பட்டுவந்த திருவாரூர் முருகனும், அவரின் அக்கா மகன் சுரேஷும் வெவ்வேறு நீதிமன்றங்களில் தாமாக முன்வந்து சரணடைந்தனர்.

(சுரேஷ்)

சுரேஷிடம் கிடைத்த தகவலின் அடிப்படையில், மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்த கணேஷ் என்பவரை தனிப்படை கைது செய்தது. திருவாரூர் முருகன், சுரேஷ், கணேஷ் ஆகிய மூவரும் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறுகிறது காவல்துறை. நகைக்கடையை நீண்ட நாட்களாக நோட்டமிட்ட இக்கும்பல், இரவு நேரங்களில் சுவரை துளையிடும் வேலையைச் செய்திருக்கிறது.

ஒவ்வொரு நாளும் இரவில் லலிதா ஜுவல்லரிக்கு வரும் இவர்கள், சுவரை சத்தம் வராத அளவு கொஞ்சம் கொஞ்சமாக துளையிட்டிருக்கிறார்கள். அதாவது செப்டம்பர் 26-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை இரவு நேரங்களில் சுவரை துளையிட்டுள்ளனர். இரவு நேரங்களில் சுவரை துளையிடும் இவர்கள் பகல் நேரங்களில் காரில் திருச்சி நகரை சுற்றி வந்துள்ளனர்.

கொள்ளை ‌சம்பவத்தின்போது கடைக்குள் திருவாரூர் முருகனும், கணேஷும் முகமூடி அணிந்து சென்றிருக்கிறார்கள். சுரேஷின் உடல் பருமனாக இருந்த காரணத்தினால் அவருக்கு பதில் கணேஷ் சென்றதாக கூறப்படுகிறது. கொள்ளை சம்பவத்துக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த முருகனுக்கு 12 கிலோவும், சுரேஷ் மற்றும் கணேசனுக்கு தலா 6 கிலோ என 24 கிலோவை அவர்கள் பங்கு போட்டுக் கொண்டதாக தெரிகிறது. முருகன் தனது காரில் வைத்திருந்த எடை மெஷினில் நகைகளை பங்கு போட்டு கொடுத்துள்ளார். இதற்கிடையில், கடந்த ஜனவரியில் திருச்சி சமயபுரத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் அரங்கேறிய கொள்ளை சம்பவத்திலும் திருவாரூர் முருகன், சுரேஷ், கணேஷூக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

(முருகன்)

இந்நிலையில் திருச்சி ஜே.எம்.2 நீதிமன்றத்தில் சுரேஷை திருச்சி தனிப்படை காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். அவரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார். அதேபோல் மதுரை வாடிப்பட்டியில் கைது செய்யப்பட்ட கணேஷ் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 25ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் திருச்சி மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். கொள்ளை சம்பவம் தொடர்பாக‌ தனிப்படை காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.