கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறுவதற்கான புதிய வழிகாட்டுதல்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது.
அதில், கொரோனா பாதித்த நோயாளிகளை மூன்று வகைகளாக பிரித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய் இருப்பதற்கான அறிகுறிகளுடன் தொற்று உறுதியானவர்களுக்கு, ஆக்சிஜன் அளவு 94 ஆக இருந்தால் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய அவசியமில்லை என்றும், வீடுகளிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள பரிந்துரைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்சிஜன் அளவு 94-க்கு கீழாக 90-க்குள் இருந்தால், அவர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆக்சிஜன் அளவு 90-க்கு கீழாக இருப்பது கண்டறியப்பட்டால், அவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.