தவெக தலைமையில் புதிய கூட்டணி ஒன்றை உருவாக்க அக்கட்சி முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான பணிகளை தற்போது அக்கட்சி தொடங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில், அதிக இடங்களைப் பெற்ற தவெக, பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. தவிர, ஆதரவு தெரிவித்த கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தவிர்த்து மற்ற கட்சிகளுக்கு (விசிக, காங்கிரஸ், ஐ.யூ.எம்.எல்.) அமைச்சரவையிலும் பங்கு கொடுத்தது. புதிய அரசு பொறுப்பேற்று கிட்டத்தட்ட 50 நாட்கள் நிறைவடைந்துள்ளன. இந்த நிலையில், தமிழக அரசியலில் நாள்தோறும் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன. அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் பலரும் தவெகவுக்குப் படையெடுத்து வருகின்றனர். தவிர, திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளில் சில, தவெகவில் ஐக்கியமாகியுள்ளன. தற்போது, மதிமுகவும் அக்கூட்டணியில் போய் இணைந்துள்ளது.
இந்த நிலையில், தவெக தலைமையில் புதிய கூட்டணி ஒன்றை உருவாக்க அக்கட்சி முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான பணிகளை தற்போது அக்கட்சி தொடங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், தங்களுக்கான ஆதரவை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும்விதமாக தவெக பல்வேறு முன்னெடுப்புக்களை தற்போது தொடங்கியுள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டின் உரிமைப் பிரச்னைகள், விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், 2029 நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றை கருத்தில்கொண்டு ஒரு அணியாக இணைந்து செயல்பட தங்கள் அரசு அமைய ஆதரவு தெரிவித்துள்ள கட்சிகளின் கூட்டத்திற்கு தவெக அழைப்புவிடுத்திருந்தது. அதுதொடர்பான கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ஐ.யூ.எம்.எல் தலைவர் காதர் மொகிதீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்திற்குப் பிறகு பேசிய மாணிக்கம் தாகூர், “தவெக தோழமைக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நல்ல தொடக்கமாக அமைந்தது. தோழமைக் கட்சிகளை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்ல, 3 விஷயங்கள் குறித்து ஆலோசித்தோம். ஒருங்கிணைப்புக் குழு, குறைந்தபட்ச செயல் திட்டம் மற்றும் பெயர் சூட்டுதல் குறித்து அடுத்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட இருக்கிறது. தவெக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வரும்போது I-N-D-I-A கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார். இக்கூட்டணியால், திராவிடக் கட்சிகள் அச்சத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே அக்கட்சிகளில் இருந்து பலர் தவெகவுக்கு படையெடுக்கும் நிலையில், இக்கூட்டணி மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.