தமிழ்நாடு

தஞ்சை பெரிய கோயிலில் இந்தி கல்வெட்டுகள் பதிப்பா..? அதிகாரிகள் மறுப்பு

தஞ்சை பெரிய கோயிலில் இந்தி கல்வெட்டுகள் பதிப்பா..? அதிகாரிகள் மறுப்பு

Rasus

தஞ்சை பெரிய கோயிலில் உள்ள தமிழ் கல்வெட்டுகளை அகற்றிவிட்டு இந்தி கல்வெட்டுகளை பதிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக சமூகவலைதளங்களில் செய்தி பரவி வருவதற்கு தொல்லியல் துறையினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

ஆயிரம் ஆண்டுகள் பழமையான தஞ்சை பெரிய கோயில் ராஜராஜ சோழனால் எழுப்பப்பட்டு, கம்பீரம் குறையாமல் தமிழர்களின் கட்டிடக் கலையையும் பாரம்பரியத்தையும் பாதுகாக்கும் சின்னமாக விளங்கி வருகிறது. இந்தக் கோயில் கல்வெட்டுகளில் மக்களாட்சி முறை, நிலங்களின் பரப்பு, தமிழர்களின் பண்பாடு நாட்டியம், தலை உள்ளிட்ட பல்வேறு செய்திகள் பொறிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் தஞ்சை பெரிய கோவிலில் உள்ள தமிழ் கல்வெட்டுக்கள் அகற்றப்பட்டு இந்தி கல்வெட்டுகள் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வீடியோக்கள் பரவி வருகிறது.

இதுகுறித்து தொல்லியல் துறையிடம் கேட்டதற்கு, “ இருப்பது ராஜநானேரி எழுத்து பொறிக்கப்பட்ட மராட்டிய கல்வெட்டுகள். கூண்டில் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் அனைத்தும் தஞ்சை பெரிய கோயில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டவை. அதில் பல அரிய தகவல்கள் உள்ளதால் அவை இங்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இந்த கல்வெட்டுகள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பரவி வரக்கூடிய செய்திகள் தவறானவை. எனவே யாரும் அதனை நம்ப வேண்டாம்” என கேட்டுக் கொண்டனர்.