தமிழ்நாடு

எழும்பூர் ரயில் நிலையத்துக்குள் செல்லும் முகிலன் - சிசிடிவி காட்சிகள் கிடைத்துள்ளதாக தகவல்

webteam

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு உட்பட பல்வேறு போராட்டங்களின் முன்னணியில் இருந்து செயல்பட்டவர் சமூக ஆர்வலர் முகிலன். தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான முகிலன் கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில், ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சில ஆதாரங்களை வெளியிட்டார். 

செய்தியாளர் சந்திப்புக்குப் பின்னர், மதுரை செல்வதற்காக எழும்பூர் ரயில் நிலையம் சென்ற முகிலனை காணவில்லை என்று கூறப்படுகிறது. ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் அவர் ரயில் நிலையத்தை விட்டு வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், இதுவரை அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவல் தெரியவில்லை.

இந்நிலையில் முகிலன் மாயமானது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையின்போது, தங்கள் தரப்பு தகவலை கூறிய எழும்பூர் ரயில்வே காவல்துறை முகிலன் ரயிலில் பயணிக்கவில்லை என்று தெரிவித்தனர். 

இது குறித்து நீதிபதியிடம் தகவல் தெரிவித்த ஒலக்கூர் எஸ்.ஐ., கூடுவாஞ்சேரியிலேயே முகிலனின் செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். முகிலன் காணாமல்போன வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அவர் எழும்பூர் ரயில் நிலையத்துக்குள் செல்லும் சிசிடிவி காட்சிகள் கிடைத்துள்ளதாக சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர்.  

இதுவரை 150 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் முகிலன் எழும்பூர் ரயில் நிலையத்துக்குள் சென்ற சிசிடிவி காட்சிகள் தற்போது கிடைத்துள்ளதாகவும், அவரது செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்ட இடத்தில் சிலரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் சிபிசிஐடி போலீஸார் கூறியுள்ளனர்.