தமிழகம் உங்களுக்கு என்ன குப்பைத்தொட்டியா என நெட்டிசன்கள் பலரும் தமிழிசையை நோக்கி கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணுமின்நிலையம் செயல்பட்டு வருகிறது. அணுமின் நிலையத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை எங்கே கொட்டுவது என்கிற கேள்வி பல காலமாக நீடித்து வருகிறது. இந்நிலையில் கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பது தொடர்பாக, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஜூலை 10-ல் மக்களிடம் கருத்து கேட்பு நடத்தப்பட உள்ளது.
இதனிடையே கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கக்கூடாது என திமுக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனால் அங்கு வாழும் மக்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும் எனவும் அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.ஆனால் கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என அணுமின்நிலையம் விளக்கமளித்துள்ளது. சேமித்து வைக்கப்படும் அணுக்கழிவுகளில் கதிர்வீச்சு அபாயம் இல்லை என்றும், அவற்றை எதிர்காலத்தில் மற்ற உபயோகங்களுக்கும் பயன்படுத்தபடலாம் எனவும் அணுமின் நிலையம் குறிப்பிட்டுள்ளது. அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையத்தின் விதிமுறைகளை பின்பற்றி அணுக்கழிவு மையம் அமைய உள்ளதால், சுற்றுவட்டார பகுதிகளில் நிலம், நீர், காற்று மாசுபடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில்தான் தமிழக பாஜக தலைவரான தமிழிசை சவுந்தரராஜன் கூடங்குளம் அணுமின்நிலை பகுதியை சமீபத்தில் பார்வையிட்டார். பின்னர் கூடங்குளம் வளாக இயக்குநர், அணுமின்நிலைய விஞ்ஞானிகளை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அணுக்கழிவு தொடர்பான தவறான தகவல்களின் காரணமாக பொதுமக்களிடம் அச்ச உணர்வு காணப்படுகிறது. இந்த அச்சத்தை போக்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு தேவை என தெரிவித்தார்.
மேலும் ட்விட்டரில் பதிவிட்ட அவர், “ தூத்துக்குடி மருத்துவமுகாமில் கலந்துகொண்டு சுட்டெரிக்கும் வெயிலில் 3 மணிநேரம் கார் பயணம் மேற்கொண்டு கூடங்குளத்திற்கு நேரில் சென்று தகவல் திரட்டினேன். விசாரித்து திரட்டிய தகவல்களையே பகிர்ந்தேன். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்பதே நோக்கம். தவறான தகவல்களால் அச்சத்தை ஏற்படுத்தக்கூடாது. சமூகஅக்கறை பயணம் தொடரும்” என தெரிவித்தார்.
இந்நிலையில் தமிழகம் உங்களுக்கு என்ன குப்பைத்தொட்டியா என நெட்டிசன்கள் பலரும் தமிழிசையை நோக்கி கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்கு காரணம் ஒன்றும் இருக்கிறது. முன்னதாக கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை கர்நாடகாவில் உள்ள கோலாரில் கொட்டலாமா என்ற பேச்சு எழுந்தது. அப்போது கர்நாடாக பாஜக தரப்பில் அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. கர்நாடகா பாஜக சார்பில் அதற்கு எதிராக போராட்டமும் நடத்தப்பட்டது. கர்நாடாகா பாஜகவின் போராட்டம் காரணமாக அங்கு அணுக்கழிவுகள் கொட்டப்படாது என மத்திய அரசு உறுதி கொடுத்தது.
இதை வைத்துதான் நெட்டிசன்கள் தமிழிசையை சாடியுள்ளனர். கர்நாடக பாஜக, அணுக்கழிவுகளை கொட்ட அனுமதி மறுக்கிறது. அப்படியென்றால் நீங்களும் கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க எதிர்ப்பு தானே தெரிவித்திருக்க வேண்டும். தமிழகம் உங்களுக்கு என்ன குப்பைத் தொட்டியா..? பாதுகாப்பான அம்சங்களுடன் அணுக்கழிவு மையம் அமைக்கப்படுமாயின் அதனை கர்நாடக பாஜகவிடம் பேசி கோலாரிலே அமைத்துக்கொள்ளலாமே. இங்கு அது தேவையில்லை என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.