தமிழ்நாடு

வாழை தோரணம், சிவப்புக் கம்பளத்துடன் அலங்கரிக்கப்பட்ட நெற்குன்றம் வாக்குச்சாவடி!

JustinDurai

நெற்குன்றம் பகுதியில் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் வாழைமர தோரணம் மற்றும் சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டு இருந்தது.

மதுரவாயல் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நெற்குன்றம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்தில் 24 பூத்கள் உள்ளது. இங்கு பொதுமக்கள் வாக்களிக்க ஏதுவாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. வாக்குச்சாவடி முன்பு வாழைமர தோரணம் மற்றும் சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டு இருந்தது. அது மட்டுமின்றி சமூக இடைவெளியுடன் பொதுமக்கள் வாக்களிக்க ஆங்காங்கே இடைவெளிவிட்டு கட்டங்கள் போடப்பட்டிருந்தது.

பொதுமக்கள் தங்களின் பூத்களை எளிதாக அறிந்து கொள்ள பலகையில் குறிக்கப்பட்டு அவர்களுக்கு வழிகாட்டுதல் குழுவினர் உள்ளனர். கொரோனா தாக்கம் ஏதும் ஏற்படாமல் இருக்க வாக்களிக்க வந்தவர்களுக்கு இலவசமாக கையுறைகளும் வழங்கப்பட்டது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தனது குடும்பத்துடன் வந்து தனது வாக்கை செலுத்தினார். மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்களுக்கு வீல் சேர் அமைக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் ஆர்வமுடன் தங்களது வாக்குகளை செலுத்தினார்கள்.

இதையடுத்து தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு அளித்த பேட்டியில், ''வாக்குப்பதிவு சுமூகமாக சென்று கொண்டு இருக்கிறது. புகார்கள் ஏதும் வரவில்லை. வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக புகார் ஏதும் வரவில்லை. வாக்குப்பதிவு அமைதியாக நடந்து வருகிறது'' என தெரிவித்தார்.