நெல்லையில் புறவழிச்சாலை ரயில்வே பாலத்தில் தூக்குமாட்டி கடிதம் எழுதிவைத்து இளைஞர் தற்கொலை செய்துகொண்டார்.
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவில் பகுதியை சேர்ந்த இளைஞர் தினேஷ் நல்லசிவன். படிப்பில் சிறந்து விளங்கிய இவர் 10ஆம் வகுப்பில் 464 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
தற்போது 12ஆம் வகுப்பு முடித்துள்ளார். இவரது தந்தை மாடசாமி குடிப்பழக்கம் உடையவர். தந்தையிடம் பலமுறை குடிப்பதை நிறுத்துமாறு தினேஷ் கூறிவந்துள்ளார். இந்நிலையில் மனமுடைந்த தினேஷ் நெல்லை தெற்கு புறவழிச்சாலை ரயில்வே பாலத்தில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார்.
அந்தப் பகுதி தினமும் காலையில் பலர் நடைபயிற்சி மேற்கொள்ளும் இடம். அவ்வாறு இன்று காலையில் நடைபயிற்சி மேற்கொள்ள வந்தவர்கள், பாலத்தில் கயிறு தொங்குவதை பார்த்துள்ளனர். எதற்காக கயிறு தொங்குகிறது என எட்டிப்பார்த்தால், அதில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்திருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுதொடர்பாக உடனே காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்து மாணவரின் உடலைக் கைப்பற்றிய காவல்நிலைதுறையினர், ஆய்வு செய்தனர். அப்போது மாணவர் இறப்பதற்கு முன்னர் எழுதி வைத்த கடிதம் ஒன்று கிடைத்தது.
அதில், ‘அப்பா நான் தினேஷ் எழுதுரது. நான் செத்துபோனதுக்கு அப்பரமாவது நீ குடிக்காம இரு. நீ குடிக்கிறதால் எனக்கு கொள்ளி வைக்காதே, மொட்டபோடாத. வெளிப்படையான சொன்னா, நீ எனக்கு காரியம் பண்ணாத. மணி அப்பா தான் பண்ணணும். இது தான் என் ஆசை. அப்ப தான் என் ஆத்மா சாந்தியடைந்தும். குடிக்காத அப்பா இனிமேலாவது. அப்ப தான் சாந்தி அடைவேன். இந்தியாவில் பிரதமர், தமிழகத்தில் முதலமைச்சர் இனிமேலாவது டாஸ்மாக் கடைகளை அடைக்கிறார்களா? என்று பார்ப்போம். இல்லை என்றால் நான் ஆவியாக வந்து மதுபான கடைகளை ஒழிப்பேன்’ என்று எழுதியுள்ளார். அதுமட்டுமின்றி தனது முகவரி மற்றும் உறவினர்களின் போன் நம்பர்களையும் அதில் எழுதிவைத்துள்ளார்.
அவரது உடலை கைப்பற்றிய காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை, அப்பகுதி மக்களையும் உருக்கமடைய செய்துள்ளது. மேலும் அங்கிருந்த பலர் இனிமேலாவது டாஸ்கடையை அரசு மூட நடவடிக்கை எடுக்க வேண்டும், அந்த இளைஞரின் தந்தை திருந்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.