தமிழ்நாடு

நெல்லை: பன்னீர்செல்வமா? பழனிசாமியா?- தொடரும் அதிமுகவின் போஸ்டர் யுத்தம்

kaleelrahman

நெல்லையில் நேற்று அதிமுக மானூர் ஒன்றிய தொண்டர்கள் என்ற பெயரில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிமுகவில் பொறுப்பில் உள்ளவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

நேற்று நெல்லை சந்திப்பு, டவுண், வண்ணாரப்பேட்டை, பாளையங்கோட்டை உள்ளிட்ட மாநகரின் பல்வேறு இடங்களில் எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்தும், ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாகவும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது.

அதில், ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்ட ஓ.பன்னீர் செல்வத்தை கலந்து ஆலோசிக்காமல் எந்த விதமான செயல்பாடுகளோ நடவடிக்கைகளோ செய்யாதே! அவ்வாறு செய்ததால்தான் தேர்தலில் தோற்றுப்போனோம், இனிமேலும் தொடர்ந்தால் தலைமை கழகத்தை முற்றுகை இடுவோம் - மானூர் ஒன்றிய அ,இ.அதிமுக தொண்டர்கள் என்ற பெயரில் நெல்லை மாநகரில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது.

தனிப்பட்ட அரசியல்வாதியின் பெயரிலோ அல்லது அதிமுகவில் எந்த பொறுப்பில் இருக்கிறார்கள் என்ற விபரம் இல்லாமலும், மானூர் ஒன்றிய அதிமுக தொண்டர்கள் என்ற பெயரில் மட்டுமே இந்த போஸ்டர்கள் அடித்து ஒட்டப்பட்டிருந்தது. இது மாற்றுக் கட்சிகளின் சதிவேலை என நெல்லை அதிமுகவில் பொறுப்பில் இருப்பவர்கள் தெரிவித்தார்கள்.

இந்த நிலையில் நேற்று ஒட்டப்பட்ட போஸ்டர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிமுகவில் பொறுப்பில் உள்ளவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். அதில், தமிழகத்தின் தனிப்பெரும் ஆளுமைமிக்க தலைவர் எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுத்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி என அச்சிடப்பட்டுள்ளது.

நெல்லை மாநகர பகுதிகளில் அதிமுக பொறுப்பாளர்கள் சார்பில் இன்று ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் புகைப்படத்துடன் மாநகர் எங்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்றும் இன்றும் நெல்லை மாநகர பகுதிகளில் அதிமுகவினரின் போஸ்டர் யுத்தம் நடந்து வருகிறது.