பிரதமர் மோடியை பற்றி அவதூறாகப் பேசிய புகாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நெல்லை கண்ணன், உடல் நலக் குறைவு காரணமாக திருநெல்வேலி மாவட்டம் வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில், நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் மாநாடு நடந்தது. அதில் பங்கேற்று பேசிய நெல்லை கண்ணன், பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் குறித்து அவதூறு பரப்பியதாக, பாஜகவினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து அவர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லை மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களிலும் பாரதிய ஜனதா கட்சியினர் நெல்லைக் கண்ணன் மீது புகார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், உடல் நலக் குறைவு காரணமாக வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நெல்லை கண்ணன் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நெல்லை கண்ணனை அரசு மருத்துவமனைக்கு மாற்றக்கோரி பாஜக மற்றும் இந்து முன்னணியினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.
பாஜகவினர் தர்ணா போராட்டத்தை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் இருந்து பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு நெல்லை கண்ணன் மாற்றப்பட்டார்.