கொரோனா பேரிடரால் வருமானம் இழந்து தவிப்பதால் தனியார் நிதி நிறுவனத்திடம் வீடு கட்ட வாங்கிய கடன் தொகையை 2 மாதங்கள் கட்ட முடியவில்லை எனவும் அதனால் வீட்டை காலி செய்து, எங்களை வெளியே விரட்டி விடுவதாக வங்கி மேலாளர் மிரட்டி அவமானப்படுத்தினார் எனவும் கூறி நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் ஏழைத் தம்பதியினர் மனு அளித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் தாழையூத்து அடுத்த ராஜவல்லிபுரம் பகுதியில் வசிப்பவர் சங்குபாண்டி. அவரும், அவரது மனைவியும் உள்ளூரில் சிறிய சவுண்ட் சர்வீஸ் கடையும், மாலையில் கறி சூப் கடையும் நடத்தி வருகிறார்கள். கடந்த 2018-ஆம் ஆண்டு தனியார் ஃபைனான்ஸ் நிறுவனமான சோழமண்டலம் கம்பெனியில் வீடு கட்டுவதற்காக ரூ.4,62,593 கடன் பெற்றுள்ளனர். மாதம்தோறும் ரூ.7,183 வீதம் கடன் தொகையை இ.எம்.ஐ ஆக திரும்ப செலுத்தி வந்துள்ளனர்.
ஆனால் எதிர்பாராதவிதமாக கொரோனா இரண்டாவது அலை சங்குபாண்டியின் குடும்ப பொருளாதாரத்தை தலைகீழாகத் திருப்பிவிட்டது. இதனால் ஏற்பட்ட வருவாய் இழப்பு காரணமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு மாதமாக வீட்டுக்கான இ.எம்.ஐ தொகையை கட்டவில்லை.
"பணம் வசூலிக்க வந்த சோழமண்டலம் கம்பெனியின் மேலாளர் என்னையும், எனது கணவரையும் தரக்குறைவாக அவமானப்படுத்தும் வகையில் பொதுவெளியில் வைத்து பேசியுள்ளார்" என சங்குபாண்டியின் மனைவி வருத்தத்துடன் தெரிவித்தார்.
"வீட்டுக்கான கடன் தொகையை மாதாமாதம் சரியாக கட்டி வந்த நிலையில், கொரோனாவால் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட போதும் சரியாக கட்டினோம். முதல் அலையில் மூன்று மாத காலம் அவகாசம் கொடுத்தபோதும், ஒரு மாத காலம் மட்டுமே நாங்கள் பணம் கட்டாமல் விட்டிருந்தோம். ஆனால், இரண்டாவது கொரோனா அலை எங்களது வாழ்வாதாரத்தை மிகவும் பாதித்துவிட்டது. சூப் கடையை நடத்த முடியவில்லை. இந்தச் சூழ்நிலையில்தான் கடந்த இரண்டு மாத காலமாக லோன் பணத்தை கட்ட முடியவில்லை.
ஆனால், பணத்தை கட்டி விடுவோம், கொஞ்சம் தாமதமாகிறது என்று மட்டுமே நாங்கள் காரணத்தைச் சொன்னோம். இதை ஏற்றுக் கொள்ளாமல் சோழமண்டலம் நிறுவனத்தில் இருந்து வந்தவர்கள் எங்களை வீட்டை விட்டு வெளியேறச் சொன்னார்கள். மூன்று நாட்களில் பணத்தை கட்டவில்லை என்றால் வீட்டில் இருக்ககூடிய பொருட்களை வெளியே எடுத்து வீசி விட்டு வீட்டை அபகரித்துக் கொள்வதாக மிரட்டி விட்டுச் சென்றனர்.
இதனால் அச்சம் அடைந்த நாங்கள் இன்று நெல்லை மாவட்ட ஆட்சியரிடம், சோழமண்டலம் நிறுவனம் சார்பில் எங்களை மிரட்டியது குறித்து மனுவாக அளித்துள்ளோம். அவரும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்" என்றனர்.
- நாகராஜன்