தமிழ்நாடு

நெல்லை: சக்கர நாற்காலி இல்லாததால் 200 மீ. தவழ்ந்து வந்து வாக்களித்த மாற்றுத்திறனாளி பெண்!

kaleelrahman

நெல்லை மாவட்டம் பணகுடியில் உள்ள வாக்குச் சாவடியில் மாற்றுத்திறனாளிக்கு உரிய வீல் சேர் வழங்காததால் மாற்றுத்திறனாளி பெண் 200 மீட்டர் தூரம் தவழ்ந்து வந்து வாக்களித்தார்.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட பணகுடி பேரூராட்சியில் 50-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் திருஇருதய ஆரம்பப்பள்ளியில் 8 வாக்குச்சாவடிகள் உள்ளன. 234வது வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்காக மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் வந்திருந்தார்.

அவர் பள்ளியின் உயரமான படிகளில் தவழ்ந்தவாறு வாக்குச் சாவடிக்கு வந்தார். அங்கு ஆண்கள் மட்டுமே வாக்களிக்க முடியும், பெண்களுக்கு தனியாக வாக்குச்சாவடி உள்ளது என அதிகாரிகள் கூறினர். இதனையடுத்து அந்த மாற்றுத்திறனாளி பெண் பல படிகளை தாண்டி தகழ்ந்து சென்று தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.

இந்த வாக்குச் சாவடியில் முதியோர்களையும், மாற்றுத்திறனாளிகள் அழைத்துச் செல்வதற்கு வீல்சேர் கொடுக்கப்படவில்லை. மேலும் முதியோர்கள் பலரும் நடக்க முடியாமல் நடந்து சென்றனர். பள்ளியின் வாயில் உயரமாக இருந்ததால் அதில் இறங்க முடியாமல் முதிர்ந்த பெண் ஒருவர் கஷ்டபட்டார்.

இதனால் அங்கு வந்த வாக்காளர்கள் வீல்சேர் இல்லாதது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் முறையாக வீல்சேர் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பணகுடி திருஇருதய ஆரம்ப பள்ளியில் இருக்கும் வாக்குச் சாவடிக்கு வில்சேரும் வழங்கவில்லை. இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாக்காளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.