School girl
School girl pt desk
தமிழ்நாடு

நெல்லை: ஆய்வகத்தில் தவறி விழுந்த ஆசிட் பாட்டில்-பறிபோன பள்ளி மாணவியின் கண் பார்வை! அதிர்ச்சி சம்பவம்

webteam

செய்தியாளர்: மருதுபாண்டி

திருநெல்வேலி மாவட்டம் சங்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் - சண்முகசுந்தரி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இதில் மூத்த மகள் 11ஆம் வகுப்பும், இரண்டாவது மகள் 9 ஆம் வகுப்பும், மகன் ஆறாம் வகுப்பு படித்து வருகின்றனர்.

school

தாழையூத்து பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் இவருடைய இரண்டாவது மகள், பள்ளியில் போதுமான வகுப்பறைகள் இல்லாத காரணத்தால் ஆய்வகத்தில் அமர்ந்து படிக்க வைக்கப்பட்டுள்ளதாகவும், வகுப்பு முடிந்தவுடன் மாணவிகள் கதவை பூட்ட முயன்ற போது, கதவு தட்டி ரேக்கில் அடுக்கி வைத்திருந்த ஆசிட் பாட்டில் தவறி கீழே விழுந்ததில் மாணவியின் இரண்டு கண்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து உடனடியாக மாணவியை மீட்டு நெல்லை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது, இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

அதில், தாழையூத்து அரசு பள்ளி வளாகத்தில் கூடுதல் கட்டடங்கள் கட்டித் தரவேண்டும் என்றும் படுகாயமடைந்த மாணவிக்கு உரிய சிகிச்சை அளித்து பார்வை மீண்டும் வர தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அலட்சியமாக செயல்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hospital

இந்த நிலையில், மாணவியின் தந்தை பாலமுருகன் தாழையூத்து காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்ட நிலையில், இந்த சம்பவம் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பதை அறிய மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியை தொடர்பு கொண்டபோது அவர், அழைப்பை எடுக்கவில்லை.