7 தமிழர் விடுதலைக்கு மட்டும் தனிச் சலுகை என்பதை என்னாலும் காங்கிரஸ் கட்சியாலும் ஏற்றுக்கொள்ள முடியாது என சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள விராட் சிலையில் நடைபெறும் ஒன்றிய கவுன்சிலர் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சுப்பிரமணியனை ஆதரித்து பரப்புரை செய்ய வந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசும்போது, “7 தமிழர் விடுதலைக்கு மட்டும் தனிச் சலுகை என்பதை என்னாலும் காங்கிரஸ் கட்சியாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழகத்தில் கொலை வழக்குகளில் தண்டிக்கப்பட்டு 25 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என சட்டம் ஏற்றப்பட்டால் அதை நான் வரவேற்கிறேன்.
உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் வெற்றி பிரகாசமாக உள்ளது. நடிகர் கமலஹாசன் எனக்கு தாய்மாமன் முறை அவர், தமிழகத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டுமென்றால் கட்சியை கலைத்துவிட்டு அரசியலில் இருந்து விலகி சமுதாய ஆர்வலராக சமுதாய குரலாக ஒலிக்க வேண்டுமே தவிர அவர், அரசியல் கட்சியை நடத்தி வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.
கோடநாடு ஒரு மர்மதேசம். ஆங்கில பட கதாசிரியர்கள் கூட இதுபோன்ற கதைகளை எழுதி இருக்க முடியாது. எஸ்டேட் வாங்கியதே ஒரு மர்மம். அங்கு நடைபெற்ற சம்பவங்கள் ஒரு மர்மம், முன்னாள் முதல்வர் இறந்தவுடன் அங்கு பணியாற்றிய ஒவ்வொருவராக இறக்கிறார்கள். இதில் முழு விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்” என்று கூறினார்.