தமிழ்நாடு

கனரா வங்கி படிவங்களில் தமிழ்மொழி புறக்கணிப்பு?

கனரா வங்கி படிவங்களில் தமிழ்மொழி புறக்கணிப்பு?

webteam

பெரம்பலூர் அருகே கனரா வங்கியில் பயன்படுத்தப்படும் படிவங்களில் தமிழ்மொழி புறக்கணிக்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில், அதற்கு வங்கி மேலாளர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் தமிழ்மொழி புறக்கணிக்கப்படுவதாக அவ்வப்போது ஆங்காங்கே குற்றச்சாட்டு எழுவது தொடர்கிறது. அந்த வகையில் ‌தற்போது பெரம்பலூர் அருகே நக்கசேலத்தில் இயங்கிவரும் கனராவங்கியில் பயன்படுத்தப்படும் படிவங்களில் தமிழ்மொழி புறக்கணிக்கப்படுவதாக வாடிக்கையாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். பணம் செலுத்துவதற்கும், எடுப்பதற்கும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழி இடம்பெற்றுள்ள படிவங்கள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுவருவதாக தெரிகிறது.

பெரும்பாலும் கிராமப்புற பகுதிகளை சேர்ந்த வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் தமிழ் மொழி இல்லாத படிவங்கள் தரப்படுவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே, தமிழ் மொழியில் அச்சடிக்கப்பட்ட படிவங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது.

புகார் தொடர்பாக வங்கி மேலாளர் ஜெகநாதனிடம் கேட்டபோது, தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலும் இதே நடைமுறைதான் இருக்கிறது எனத் தெரிவித்தார். கடந்த வருடமே படிவம் நிரப்புவதி‌ல் மொழிப்பிரச்னை இருந்ததால் வாடிக்கையாளர்களிடம் மனு கொடுக்க சொல்லியதாகவும், அந்த கோரிக்‌கை மனுக்களை மின்னஞ்சல் மூலம் மேலதிகாரிகளுக்கு அனுப்பிவைத்து விட்டதாகவும் மேலாளர் ஜெகநாதன் விளக்கம் அளித்துள்ளார்.