தமிழ்நாடு

ஆன்லைன் கேமில் அடிமையாகி பணத்தை இழந்த நீட் பயிற்சி மாணவர்- வீட்டிற்கு பயந்து விபரீத முடிவு

Sinekadhara

தருமபுரி அருகே நீட் தேர்வுக்கு படித்துவந்த மாணவர் ஆன்லைன் கேமில் பணத்தை இழந்ததால் மனமுடைந்து எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை அடுத்துள்ள குரும்பட்டி மாரி கொட்டாய் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் வெங்கடேஷ் (20) பணிரெண்டாம் வகுப்பு முடித்துள்ளார். இந்நிலையில் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆசையில் மூன்று வருடங்களாக நீட் தேர்வுக்காக தயாராகிவந்த அவருக்கு ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிகளுக்காக அவருடைய தந்தை செல்போன் வாங்கிக்கொடுத்ததாகக் கூறப்படுகிறது. முதலில் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பாடங்கள் சம்பந்தமான குறிப்புகள் உள்ளிட்டவற்றில் தீவிரமாக கவனம் செலுத்திவந்த வெங்கடேஷ் ஒருகட்டத்தில் அதில் வரும் கேம்கள் உள்ளிட்டவற்றில் ஆர்வம் காட்டத் தொடங்கி உள்ளார். தொடர்ந்து நாளடைவில் இந்த ஆர்வம் அதிகமாகவே பணம் கட்டி கேம்கள் விளையாட ஆரம்பித்துள்ளார்.

தொடர்ந்து விளையாடியதில் தன்னிடம் இருந்த பணம் அனைத்தையும் இழந்துள்ளார். மேலும் தொடர்ந்து விளையாடுவதற்கு பணம் இல்லாததால் வீட்டிலிருந்த நகையை தனியார் நகை அடகுக்கடையில் அடகு வைத்து அந்த பணத்தில் ஆன்லைன் கேம் விளையாடியதாகக் கூறப்படுகிறது. அப்பொழுது அந்த கேமில் 50 ஆயிரம் ரூபாயை இழந்துள்ளார். தொடர்ந்து பணத்தை இழந்து வருவதால், வீட்டில் உள்ளவர்களுக்கு என்ன சொல்ல முடியும் என அச்சமடைந்துள்ளார். இதனால் மனவிரக்தி அடைந்து கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

இதனால் கடந்த 7ஆம் தேதி வேறு வழியின்றி எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையறிந்த அவரது பெற்றோர், வெங்கடேசை சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து கடந்த 5 நாட்களாக சிகிச்சை அளிக்கபட்டு வந்த நிலையில், வெங்கடேஷ் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். தருமபுரி அருகே ஆன்லைன் கேம் விளையாடி பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.