தமிழ்நாடு

நீட் கருணை மதிப்பெண் வழக்கு: 20ம் தேதி விசாரணை

நீட் கருணை மதிப்பெண் வழக்கு: 20ம் தேதி விசாரணை

webteam

தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கவேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு மீதான விசாரணை வரும் 20ஆம் தேதி நடைபெற உள்ளது.

மே 6ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு தமிழ் வினாத்தாளில் 49 கேள்விகள் பிழையுடன் கேட்கப்பட்டதால், 196 மதிப்பெண் கூடுதலாக வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் கருணை மதிப்பெண் வழங்க வேண்டுமென கடந்த 10ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிடும் வரை மருத்துவ கலந்தாய்வை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. இது தொடர்பாக சிபிஎஸ்இ மேல் முறையீடு செய்யும் பட்சத்தில் தனது தரப்பு விளக்கங்களையும் கேட்க வேண்டும் என டி.கே.ரங்கராஜன் கடந்த 11ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தார்.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ நேற்று மேல்முறையீடு செய்தது. அதே போல் சென்னையை சேர்ந்த சத்ய தேவ் என்ற மாணவரும் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். வழக்கை உடனே விசாரிக்க வேண்டும் என சிபிஎஸ்இ கோரிக்கை விடுத்ததை அடுத்து வரும் 20ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணை நடத்த உள்ளது. அதே போல், மாணவர் சத்ய தேவ்வின் மனு மீதான விசாரணையும் அன்றைய தினமே நடைபெற உள்ளது.