தமிழ்நாடு

நீட் தேர்வு குழப்பம் எதிரொலியாக தாய் தற்கொலை

நீட் தேர்வு குழப்பம் எதிரொலியாக தாய் தற்கொலை

webteam

நீட் தேர்வு விவகாரத்தால், தனது மகளின் எதிர்காலத்தை எண்ணி வேலூரைச் சேர்ந்த தாய் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வேலூர் நீட் தேர்வு விவகாரத்தில் நேற்றைய முன் தினம் வரை நீடித்த குழப்பத்தால், வேலூரை சேர்ந்த நித்தியலட்சுமி என்பவர் இரண்டு நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். தனது மகள் அபிதாமதி பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்தும், நீட் தேர்வு விவகாரத்தில் அரசு தீர்க்கமான முடிவை எடுக்காததன் காரணமாகவே மனைவி தற்கொலைக்கு தள்ளப்பட்டதாக உயிரிழந்த நித்தியலட்சுமியின் கணவர் சிவசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். 

மகளை டாக்டராக்கி பார்க்கவேண்டும் என்ற ஆசையில் இருந்த நித்தியலட்சுமிக்கு, தமிழகத்தில் நிலவிய நீட் தேர்வு குழப்பம் மன உளைச்சலை தந்ததாக கூறுகின்றனர் அவரின் குடும்பத்தினர். அபிதாமதிக்கு இனி மருத்துவ மாணவர் சேர்க்கையில் இடம் கிடைத்தாலும் தங்கள் குடும்பத்திற்கு ஏற்பட்ட இழப்பு ஈடு செய்ய முடியாது என்றும் மாணவியின் குடும்பத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.

நீட் தேர்வு விவகாரத்தை பொறுத்தவரை அரசு முன்கூட்டியே சரியான முடிவை எடுத்திருக்க வேண்டும் என்றும், அவ்வாறு எடுத்திருந்தால் தங்கள் குடும்பத்தில் உயிரிழப்பு நிகழ்ந்திருக்காது எனவும் நித்தியலட்சுமியின் குடும்பத்தினர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.