தமிழ்நாடு

தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை 17% குறைந்தது

தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை 17% குறைந்தது

jagadeesh

தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை நடப்பாண்டில் 17 சதவிகிதம் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.

2020-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிலிருந்து நீ‌ட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை 17 சதவிகிதம் குறைந்து ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 502 ஆக உள்ளது. 2016-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த ஆண்டுதான் தமிழகத்திலிருந்து நீட் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பித்திருப்பது குறைந்திருக்கிறது.

கட் ஆப் மதிப்பெண்கள் அதிகரித்திருப்பது மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு சவாலாக இருப்பதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இதுதவிர, மருத்துவப் படிப்புகளுக்கு இடங்கள் குறைவாக இருப்பதும், மாணவர்கள் விண்ணப்பிப்பது அதிகமாக இருப்பதும் காரணமாகக் கூறப்படுகிறது. 2019-ஆம் ஆண்டில் நீட் தேர்வு எழுதிய 4 ஆயிரத்து 202 மாணவர்கள் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்துள்ள நிலையில், அவர்களில் 2 ஆயிரத்து 916 மாணவர்கள் மீண்டும் நீட் தேர்வு எழுதியவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அத்தேர்வை எழுத மாணவர்களிடையே ஆர்வம் குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேநேரம் தேசிய அளவில் நீட் தேர்வுக்கு 74 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக விண்ணப்பித்துள்ளது தெரியவந்துள்ளது.