தமிழ்நாடு

நீட் தேர்வு மசோதா: உடனடியாக ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் - திருமாவளவன்

kaleelrahman

நீட் தேர்வு மசோதவிற்கு காலம் தாழ்த்தாமல் உடனடியாக ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில முதன்மை செயலாளராக இருந்து மறைந்த முனைவர் சு.மகாதேவனின் நினைவேந்தல் நிகழ்ச்சி ஆவடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு மகாதேவன் உருவப்படத்தை திறந்து வைத்து மலர்தூவி அஞ்சலி செய்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் “தமிழக மாநில வளர்ச்சிக் குழு பொறுப்பு வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி. இந்தியா முழுவதும் நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு. தமிழக அரசு நீட் தேர்வு ரத்து சம்பந்தமாக எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் ஆதரவு அளிக்கும்.

நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு கொண்டுவந்துள்ள மசோதவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கி அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆளுநர் இனியும் கால தாமதம் செய்யாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.