தமிழ்நாடு

ஓராண்டு காத்திருந்து கோச்சிங் சென்ற மாணவர்களுக்கு அதிக இடம்

rajakannan

2015-16 கல்வியாண்டில் படித்து வேறு கல்லூரிகளில் சேராமல், ஓராண்டு நீட் பயிற்சியில் ஈடுபட்ட ஆயிரத்து 4 பேருக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. 

நீட் தேர்வை பொருத்தவரை மாணவர்கள் ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழித்து பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மொத்தம் மூன்று முறை மாணவர்கள் நீட் தேர்வை எழுதலாம். அதனால் வசதியுள்ள மாணவர்கள் காத்திருந்து தேர்வு எழுதி மருத்துவம் படிக்க செல்கின்றனர். 

2016-17 கல்வியாண்டில் +2 பயின்று நீட் தேர்வு எழுதிய ஆயிரத்து 310 பேருக்கு மட்டுமே இடம் கிடைத்துள்ளது. இதனால் மீதமுள்ள மாணவர்கள் ஓராண்டு அல்லது இரண்டு வருடங்கள் காத்திருந்து நீட் தேர்வு எழுதியுள்ளனர். 

கடந்தாண்டு சிபிஎஸ்இயில் பயின்ற 30 பேருக்கு மட்டுமே ‌இடம் கிடைத்திருந்தது. ஆனால், இந்தாண்டு ஆயிரத்து 220 பேருக்கு மருத்துவம் பயிலும் வாய்ப்பு உருவாகியுள்ளது. 

இவை தவிர வெளிமாநிலத்தில் பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகள் 422 பேருக்கு இந்தாண்டு மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைத்துள்ளது. இதுவரை வெளி மாநிலத்தில் பணியாற்றுபவர்களின் பிள்ளைகள் தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் சேர முடியாத நிலையில் நீட் மூலம், 12 சதவிகித இடங்களை அவர்கள் நிரப்பியுள்ளனர். 

இந்தாண்டு பெருநகரங்களில் படித்த மாணவர்களுக்கு அதிக இடம் கிடைத்துள்ளது. கடந்தாண்டு மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் 50 சதவிகித இடங்களை நிரப்பிய கிருஷ்ணகிரி, நாமக்கல், தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த 273 பேருக்கு மட்டுமே இந்தாண்டு இடம் கிடைத்துள்ளது.