சூர்ய பிரகாஷ்
சூர்ய பிரகாஷ் புதியதலைமுறை
தமிழ்நாடு

இளைஞரின் இடுப்பில் உடைந்து சிக்கிக்கொண்ட ஊசி... அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்; தந்தை புகார்!

PT WEB

செய்தியாளர் - ஆவடி நவீன் குமார்

சென்னை பாடியில் சத்யா நகர் 2வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் லோக சந்துரு. இவரது மகன் சூர்யபிரகாஷ் கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 10ம் தேதி மதியம், வீட்டின் மொட்டைமாடிக்கு சூர்யபிரகாஷ் சென்றபோது அங்கிருந்த இரும்பு கம்பி அவரது கையில் லேசாக கிழித்துள்ளது. இதனால், சூர்ய பிரகாஷை அவரது பெற்றோர் அருகே இருக்கும் ராஜம் நர்சிங் ஹோமுக்கு டிடி ஊசி போடுவதற்காக அனுப்பி வைத்தனர். சூர்யபிரகாஷின் இடுப்பில் செவிலியர் ஊசி போட்டபோது, எதிர்பாராதவிதமாக அந்த ஊசி உடைந்து அவரது இடுப்பிலேயே சிக்கிக்கொண்டுள்ளது.

பாதிக்கப்பட்ட இளைஞரின் தந்தை

இதனால் அதிர்ச்சி அடைந்த செவிலியர், சூர்யபிரகாஷிடம் அருகே உள்ள ஸ்கேன் செட்டருக்கு சென்று ஸ்கேன் எடுக்குமாறு கூறியுள்ளார். அவர், ஸ்கேன் செண்டருக்கு செல்வதற்கு ஆம்புலன்ஸ் அல்லது கார் வசதி செய்து தராமல் விட்டதால், நடந்தே ஸ்கேன் செண்டருக்கு சென்றுள்ளார் சூர்ய பிரகாஷ். அப்போது அவர் நடக்க நடக்க, ஊசி சதையில் ஆழமாக இறங்கி குத்தி கிழித்துள்ளது. வலியால் துடித்த அவர் தனது தாய்க்கு தகவல் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு உடனடியாக ஸ்கேன் சென்டருக்கு சென்று ஸ்கேன் எடுத்துவிட்டு, ராஜம் நர்சிங் சென்டருக்கு சென்று செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

மேலும், சம்பவ இடத்துக்கு வந்த சூரிய பிரகாஷின் தந்தை, உடனடியாக அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஊசியை அகற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி, கடந்த 10ம் தேதி இரவு சூரிய பிரகாஷுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில், சுமார் 3 மணி நேர சிகிச்சைக்கு பிறகு சிக்கியிருந்த ஊசி அகற்றப்பட்டது. இது குறித்து கடந்த 11ஆம் தேதி கொரட்டூர் காவல் நிலையத்தில் சூரிய பிரகாஷின் தந்தை லோகசந்துரு புகார் அளித்துள்ளார்.

14ம் தேதி சிஎஸ்ஆர் பதிவு செய்யப்பட்ட நிலையில், 18ஆம் தேதி விசாரணைக்கு அழைத்த போது, போலீசார் சரிவர விசாரணை நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் லோகசந்துரு. மேலும் சம்பந்தப்பட்ட நர்சிங் சென்டர் தரப்பில் இருந்து 10க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், சமாதானமாக செல்லலாம் என்று கேட்டதாகவும் லோக சந்துரு தெரிவித்துள்ளார். கொரட்டூர் போலீசார் சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார் லோக சந்துரு. அலட்சியமாக செயல்பட்ட நர்சிங் ஹோம் நிரந்தரமாக மூடப்பட வேண்டும் என்றும் சூர்யபிரகாஷின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.