நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
ஈரோட்டில் நடைபெற்ற மனிதநேய மக்கள் கட்சியின் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்த வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி தமிழகத்தில் நிகழ்ந்த இயற்கை பேரிடர்களை பார்வையிட வராமல், நாடாளுமன்ற தேர்தல் வருவதால் வாக்குகள் பெறுவதற்காக தமிழகம் வருவதாக குற்றம்சாட்டினார். தமிழகத்தின் வாழ்வாதாரத்தை பிரதமர் பாதுகாக்க தவறிவிட்டதாக கூறிய அவர், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை, ஹைட்ரோகார்பன், நீட் விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லாத பிரதமர், ஆட்சி பறிபோகும் நிலையில் அறிவித்துள்ள பட்ஜெட் தேசத்திற்கானது அல்ல என்றார்.
இது தேர்தல் அரசியல் அரசியலுக்கானது என்றார். ராஜீவ்கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க வேண்டும் என தேர்தலை கருத்தில் கொண்டு, தமிழக அரசு இதனை செய்யவேண்டும் என வலியுறுத்தினர். வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்குள்ளாக தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தமிழர்களுக்கு 90% வேலைவாய்ப்பு வழங்க சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 28ஆம் தேதி பேரணி நடத்த இருப்பதாக கூறினார்.