தமிழ்நாடு

’’வருவாய் பற்றாக்குறையை சமாளிக்க மத்திய அரசு உதவ வேண்டும்’’ - தமிழக நிதியமைச்சர் கோரிக்கை

sharpana

கொரோனா சூழல் காரணமாக மாநில அரசுகளுக்கு ஏற்படும் வருவாய் பற்றாக்குறையை சமாளிக்க மத்திய அரசு உதவ வேண்டும் என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் காணொலி முறையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசினார். ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை சரியான நேரத்தில் செலுத்துவதில் தயக்கம் காட்டுவதும் இழப்பீட்டுத் தொகையை வழங்குவதில் பரிவின்மை நிலையை மேற்கொண்டிருப்பதும் ஒன்றிய அரசு மீது நியாயமான கோபத்தையும் விரக்தியையும் மாநில அரசுகளுக்கு ஏற்படுத்தியுள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டார்.

மாநில அரசு கொள்முதல் செய்யும் கொரோனா தடுப்பூசிகள், மற்றும் கொரோனாவிற்கான ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகளுக்கு ஜிஎஸ்டியிலிருந்து முழு விலக்கு தற்காலிகமாவவது வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஆக்சிஜன் செறிவூட்டிகள், பல்ஸ் ஆக்சிமீட்டர் உள்ளிட்ட கொரோனா சிகிச்சை கருவிகளுக்கு வரி விகிதம் குறைக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேட்டுக்கொண்டார். மத்திய அரசு வழங்க சரக்கு மற்றும் சேவை வரி முறையை ஆழமாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும் இதைச் செய்யத் தவறினால் எதிர்காலத்தில் பெரும் இழப்பு நேரிடலாம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.